இயற்பியலை எளிமையாக கற்று கொடுத்ததால் ஜனாதிபதியிடம் நல்லாசிரியர் விருது பெற்ற தமிழர்
இயற்பியலை எளிமையாக கற்று கொடுத்ததால் தமிழரான பேராசிரியர் ஜனாதிபதியிடம் நல்லாசிரியர் விருது பெற்றார்.
மும்பை,
இயற்பியல் என்றாலே மாணவர்களுக்கு சற்று அலர்ஜி தான். அந்த இயற்பியலையும் புதுமையான முறையில் கற்றுக்கொடுப்பது தான் இவரது திறமை. இதனால், அவரின் பாடவேளை எப்போது வரும் என மாணவர்கள் காத்திருக்கும் ஒரு ஆசிரியர் தான் இவர்.
மும்பை மான்கூர்டு அணுசக்தி நகரில் உள்ள அடாமிக் எனர்ஜி மத்திய பள்ளியில் இயற்பியல் ஆசிாியராக இருப்பவர் ஜெபின் ஜோயல். மாணவர்கள் படிக்க சிரமப்படும் இயற்பியலை எளிமையாக கற்று கொடுத்ததன் மூலம் நல்லாசிரியருக்கான தேசிய விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் இருந்து பெற்றுள்ளார் ஆசிரியர் ஜெபின் ஜோயல்.
ஜெபின் ஜோயல் கன்னியாகுமரி மாவட்டம் வாவறை கிராமத்தை சேர்ந்தவர். இவரது தந்தை அமோஸ் ஓய்வு பெற்ற ஆசிரியர். தாய் எப்சி பால். ஜெபின் ஜோயல் பள்ளி கல்வியை வாவறை பகுதியில் உள்ள பள்ளியிலும், கல்லூரி படிப்பை மாா்த்தாண்டம், சென்னையில் முடித்து உள்ளார்.
கல்வி பணியில் 21 ஆண்டுகள் அனுபவம் உள்ள இவர் மாணவர்கள் எளிதில் இயற்பியலை கற்றுக்கொள்ளும் வகையில் 82 விதமான கல்வி சாதனங்களை உருவாக்கி உள்ளார். மேலும் புதுமையான முறையில் இயற்பியலை மாணவர்களுக்கு கற்று கொடுத்து வருகிறார். குறிப்பாக விளையாட்டு, இசை போன்றவற்றின் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை கற்றுக்கொடுத்து அசத்தி வருகிறார். மேலும் இவர் கண்டு பிடித்த பல கல்வி சாதனங்கள் பல்வேறு அறிவியல் கண் காட்சிகளிலும் இடம் பெற்று உள்ளது.
இந்தநிலையில் அவர் கடந்த மாதம் செப்டம்பர் 5-ந் தேதி நல்லாசிரியருக்கான தேசிய விருதையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் இருந்து பெற்றார்.
நல்லாசிரியருக்கான தேசிய விருது பெற்ற ஆசிரியர் ஜெபின் ஜோயல் கலரி, சிலம்பாட்டம் போன்ற தற்காப்பு கலைகள் கற்று தேர்ந்தவர். மேலும் வயலின் வாசிக்கும் திறமை கொண்டவர். ஜெபின் ஜோயல் தற்போது மும்பையில் வசித்து வருகிறார் இவரது மனைவி சுமா ஜெபின் வாஷியில் உள்ள கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார்.
Related Tags :
Next Story