மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் வைத்திருப்போர் மீது நடவடிக்கை மீட்பு பணியை பார்வையிட்ட ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் வைத்திருப்போர் மீது நடவடிக்கை மீட்பு பணியை பார்வையிட்ட ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x
தினத்தந்தி 28 Oct 2019 11:15 PM GMT (Updated: 28 Oct 2019 5:14 PM GMT)

மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் வைத்திருப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீட்பு பணியை பார்வையிட்ட துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணி இரவு, பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மீட்பு பணியை தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் இரவு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்பிறகு குழந்தையின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்த ஒரு மணிநேரத்திலேயே அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டு உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கியது. தற்போது வரை மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. முதலில் ஆழ்துளை கிணற்றில் சில கருவிகளை பயன்படுத்தி மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் குழந்தை 80 அடி ஆழத்துக்கு சென்று விட்டதால், அந்த இடத்தில் இருந்து 4 அடி தூரத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதிநவீன எந்திரங்கள் கொண்டு பணிகள் நடைபெற்றாலும் மிகவும் கடுமையான பாறையாக இருப்பதால் ஒருமணி நேரத்துக்கு குறைந்த அடி தூரமே குழி போட முடிகிறது. தற்போது நவீன ரிக் எந்திரம் மூலம் ஆழ்துளை கிணறு அமைக்கப்படு கிறது. 90 அடிக்கு மேல் ஆழ்துளை கிணறு போடப்பட்ட பின்பு, பக்கவாட்டில் துளை போட முடியும்.

அதன்பிறகு பயிற்சி பெற்ற வீரர்களை உள்ளே இறக்கி குழந்தையை காப்பாற்றி மீட்டெடுக்க முடியும். தமிழகத்தில் மூடப்படாமல் உள்ள ஆழ்துளை கிணறுகளை உடனடியாக, அவர்களாகவே தாமாக முன்வந்து மூட வேண்டும். அப்படி இல்லையென்றால் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் வைத்திருப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இனி வருங்காலத்தில் இதுபோன்ற எதிர்பாராத பேரிடர் ஏற்படும்போது, அதனை எதிர்கொள்ள புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய எந்திரங்கள் வாங்குவதற்கும், புதிய எந்திரங்களை கண்டுபிடிப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுக்கும். குழந்தையை மீட்க அரசு முழுவீச்சில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story