திருப்பூரில் சொத்து தகராறு காரணமாக தையல் தொழிலாளி கட்டையால் அடித்துக்கொலை: தம்பி கைது


திருப்பூரில் சொத்து தகராறு காரணமாக தையல் தொழிலாளி கட்டையால் அடித்துக்கொலை: தம்பி கைது
x
தினத்தந்தி 28 Oct 2019 11:15 PM GMT (Updated: 28 Oct 2019 6:38 PM GMT)

சொத்து தகராறு காரணமாக திருப்பூரில் தையல் தொழிலாளியை கட்டையால் அடித்து கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீரபாண்டி,

திருப்பூர் முருகம்பாளையம் சுண்டமேடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 45), பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருடன் இவருடைய தாய் பழனியம்மாளும் வசித்து வருகிறார். பழனிச்சாமியின் உடன்பிறந்த தம்பி ஆறுமுகம் (35). இவர் அதே பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

பழனிச்சாமிக்கும், அவருடைய தம்பிக்கும் இடையே ஏற்கனவே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தீபாவளியன்று தனது தாயை பார்ப்பதற்காக ஆறுமுகம், தனது அண்ணன் பழனிச்சாமி வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டில் இருந்த பழனிச்சாமி, சொத்து தகராறு காரணமாக தம்பி மீது இருந்த கோபத்தில் எனது வீ?ட்டிற்கு ஏன் வந்தாய்? என்று ஆறுமுகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் அருகில் கிடந்த கட்டையை எடுத்து பழனிச்சாமியின் தலையில் பலமாக தாக்கியதாக தெரிகிறது. இதில் நிலைகுலைந்த பழனிச்சாமி மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். உடனே அருகில் உள்ளவர்கள் பழனிச்சாமியை மீ?ட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி உயிரிழந்தார்.

 இது பற்றிய தகவலறிந்து வீரபாண்டி போலீசார் திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வீரபாண்டி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story