வெள்ளகோவில் அருகே நூல்மில்லில் திடீர் தீ: ரூ.30 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்


வெள்ளகோவில் அருகே நூல்மில்லில் திடீர் தீ: ரூ.30 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 28 Oct 2019 10:45 PM GMT (Updated: 28 Oct 2019 6:38 PM GMT)

வெள்ளகோவிலில் நூல்மில்லில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசம் அடைந்தன.

வெள்ளகோவில்,

வெள்ளகோவில் சிவநாதபுரத்தில் தனியாருக்கு சொந்தமான ஓடு போட்ட கட்டிடத்தில் உடையார்சாமி (வயது 42) என்பவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக நூல்மில் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் தீபாவளி என்பதால் மில் இயங்கவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு திடீரென நூல்மில்லில் தீ பிடித்தது. அந்த தீ மளமளவென அங்கு இருந்த நூல் பண்டல்களில் பற்றி எரிந்தது.

உடனே அக்கம், பக்கத்தினர் நூல்மில்லில் தீப்பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தங்கள் வீடுகளில் இருந்த குடங்களில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து தீப்பிடித்த நூல்மில்லில் மீது ஊற்றினர். தகவல் அறிந்து வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்தில் இருந்து நிலைய அலுவலர் சி.தனசேகரன் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ தொடர்ந்து கொழுந்து விட்டு எரிந்ததால் காங்கேயத்தில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. பின்னர் இரு தீயணைப்பு வாகனங்களில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் நூல் பண்டங்கள், எந்திரங்கள் என ரூ.30 லட்சம் மதிப்புள்ள பொருட் கள் எரிந்து சேதம் அடைந்து இருக்கலாம் என வெள்ளகோவில் போலீசார் தெரிவித்தனர். தீபாவளி அன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்ததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தீயணைப்பு படையினர் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் அக்கம், பக்கத்து வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story