மேட்டுப்பாளையம் அருகே பரிதாபம், கல்லாற்றில் மூழ்கி 6 வயது சிறுவன் சாவு
மேட்டுப்பாளையம் அருகே குளிக்க சென்றபோது, கல்லாற்றில் மூழ்கி 6 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மணியகாரன்காடு பகுதியை சேர்ந்தவர் பிரதிஸ்குமார் (வயது 36). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி நிரோஷா (30). இவர்களுடைய மகன் ரிதிஸ்(6) மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் நேற்று தீபாவளி பண்டிகையையொட்டி பிரதிஸ்குமார் தனது மகன் ரிதிஸ் மற்றும் உறவினர்களுடன் மாலை 4.30 மணியளவில் மேட்டுப்பாளையம்- ஊட்டி மெயின் ரோட்டில் தூரிப்பாலம் அருகே உள்ள கல்லாறு பகுதிக்கு குளிக்க சென்றார். அப்போது கல்லாற்றில் குளித்து கொண்டிருந்தபோது, ரிதிஸ் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டான்.
இதையடுத்து அவன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டான். உடனே அருகில் இருந்தவர்கள் அவனை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரிதிஸ் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல கோவையை அடுத்த அன்னூர் அருகே உள்ள சாலைப்பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் பாலமுருகன்(22). தொழிலாளி. நேற்று மதியம் 3 மணியளவில் பாலமுருகன் தனது நண்பர்கள் 6 பேருடன் சிறுமுகை அருகில் பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றார். ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்ற பாலமுருகனை வெள்ளம் அடித்து சென்றது.
இதுகுறித்து சிறுமுகை போலீசார் மற்றும் மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜபிரபு மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் பரிசல் மூலம் ஆற்றின் கரையோரப்பகுதியில் பாலமுருகனை தீவிரமாக தேடி வருகின்றனர். நேற்று மாலை நீண்ட நேரமானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) தேடும் பணி தொடரும் என்று தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story