கோபி அருகே தீபாவளிக்கு பட்டாசு வெடித்தபோது ராக்கெட் வெடி விழுந்து கரும்பு தோட்டம் எரிந்து நாசம்


கோபி அருகே தீபாவளிக்கு பட்டாசு வெடித்தபோது ராக்கெட் வெடி விழுந்து கரும்பு தோட்டம் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 28 Oct 2019 10:30 PM GMT (Updated: 28 Oct 2019 6:54 PM GMT)

கோபி அருகே தீபாவளிக்கு பட்டாசு வெடித்தபோது ராக்கெட் வெடி விழுந்து கரும்பு தோட்டம் எரிந்து நாசம் ஆனது.

டி.என்.பாளையம்,

கோபி கள்ளிப்பட்டி அருகே உள்ள பகவதி நகர் செல்லும் வழியில் ரங்கநாதன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த பொன்னுசாமி (55) என்பவர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். தற்போது 5 ஏக்கரில் கரும்பு பயிரிட்டு இருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் கரும்பு தோட்டத்தில் இருந்து பொதுமக்கள் புகை வருவதை பார்த்தனர். உடனே இதுபற்றி கோபி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு துறையினர் அங்கு சென்று பார்த்தபோது தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு இருந்தது. உடனே தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

தீபாவளி தினத்தன்று அந்த பகுதியில் பட்டாசுகள் வெடித்தபோது ராக்கெட் வெடி கரும்பு தோட்டத்தில் விழுந்து தீப்பிடித்து இருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 1½ ஏக்கர் பரப்பளவிலான கரும்புகள் எரிந்து நாசமானது.

இதேபோல் மற்றொரு தீ விபத்து நடந்துள்ளது. டி.என்.பாளையம் அருகே உள்ள வாணிப்புத்தூரில் கருப்பசாமி (48) என்பவர் பந்தல் கடை வைத்துள்ளார். இவரது கடையில் இருந்து நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் குபுகுபுவென புகை கிளம்பி உள்ளது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு துறையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர். இதில் கடையில் இருந்த தென்னை ஓலைகள், மூங்கில் குச்சிகள் எரிந்து நாசமாயின. தீபாவளி அன்று பட்டாசுகள் வெடித்ததில் அதில் இருந்த தீப்பொறி கடையின் மீது பட்டு தீப்பற்றி எரிந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

Next Story