சமாதானம் பேச அழைத்து தொழிலாளி வெட்டிக்கொலை பழிக்குப்பழியாக நடந்ததா? போலீசார் விசாரணை


சமாதானம் பேச அழைத்து தொழிலாளி வெட்டிக்கொலை பழிக்குப்பழியாக நடந்ததா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 28 Oct 2019 11:15 PM GMT (Updated: 28 Oct 2019 6:55 PM GMT)

தஞ்சையில், சமாதானம் பேச அழைத்து தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாமா? என சந்தேகம் அடைந்த போலீசார் அந்த கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர்,

தஞ்சை வடக்குவாசல் பொன்றிபாளையத்தை சேர்ந்தவர் விஜி என்ற விஜயன்(வயது 34). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். வடக்கு வாசல் சிரேஸ்சத்திரம் சாலையில் உள்ள கங்காநகரை சேர்ந்தவர் சங்கர்(38). இவர், டிரம்ஸ் மற்றும் குளிர்பதன சவப்பெட்டியை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.

விஜயனுக்கும், சங்கருக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் இவர்கள் இருவரும் பேசாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை சங்கர், விஜயனுக்கு போன் செய்து நாம் இருவரும் சமாதானமாக போய் விடுவோம். இது தொடர்பாக பேசவேண்டும். எனவே எனது வீட்டுக்கு வா என்று விஜியை அழைத்துள்ளார்.

சங்கரின் அழைப்பை ஏற்று அவரது வீட்டுக்கு விஜயன் சென்றுள்ளார். அங்கு வீட்டிற்குள் அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென சங்கர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்துள்ளார்.

நிலைமையை உணர்ந்த விஜயன், இனி ஒரு நிமிடம் தாமதித்தாலும் தனது உயிர் மிஞ்சாது என்று எண்ணி உயிர் தப்பிப்பதற்காக அந்த இடத்தில் இருந்து எழுந்து ஓட முயன்றுள்ளார். அதற்குள் அவரது தலையின் பின்பகுதியில் சங்கர் ஓங்கி வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே விஜயன் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

இதையடுத்து இறந்த விஜயனின் உடலை வீட்டுக்குள் இருந்து தரதர வென இழுத்து வீட்டு வாசல் அருகே போட்டார். இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் சத்தம் போட்டனர். அதற்குள் சங்கர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். சங்கர் வீட்டு வாசலில் விஜயன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை அடுத்து ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது கொல்லப்பட்ட விஜயனின் உறவினர்கள், கொலையாளியை கைது செய்தால் தான் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்செல்ல அனுமதிப்போம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சங்கர் வீட்டு முன்பு திரண்டு இருந்த விஜயனின் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கொலையாளியை விரைவில் கைது செய்து விடுவோம் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் விஜயனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சங்கரின் நண்பர் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஜயனும் அவரது நண்பர் ஒருவரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். இந்த முன்விரோதம் காரணமாக கடந்த ஆண்டு விஜயனின் நண்பரும் கொலை செய்யப்பட்டார். அதை தொடர்ந்து தற்போது விஜயனும் கொலை செய்யப்பட்டதால் பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து தஞ்சை மேற்கு போலீசார் சங்கர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ், பிரதீப், தினேஷ், கோபி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட விஜயன் மீது தஞ்சையில் உள்ள போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்பட 15 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story