கள்ளக்குறிச்சியில், ரோந்துப்பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு


கள்ளக்குறிச்சியில், ரோந்துப்பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு
x
தினத்தந்தி 28 Oct 2019 9:30 PM GMT (Updated: 28 Oct 2019 7:40 PM GMT)

கள்ளக்குறிச்சியில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

கள்ளக்குறிச்சி, 

தியாகதுருகம் முன்னாள் ராணுவ வீரர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55). இவர் கள்ளக்குறிச்சி-சங்கராபுரம் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு வாகனத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று மதியம் ரவிச்சந்திரன் சக போலீஸ்காரர்களுடன் கள்ளக்குறிச்சி சுந்தரவிநாயகர் கோவில் தெருவில் ரோந்துப்பணியில் ஈடுபட்டதோடு, அங்குள்ள ஒரு தியேட்டர் முன்பு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென நெஞ்சை பிடித்தபடி மயங்கி விழுந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சக போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக துருகம் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரவிச்சந்திரன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் ஆகியோர் தியாகதுருகத்துக்கு வந்து, ரவிச்சந்திரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பணியின்போது உயிரிழந்த ரவிச்சந்திரனுக்கு சாவித்ரி என்ற மனைவியும், சுரேந்திரன்(29) என்ற மகனும், பாரதி(24) என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story