திருச்சியில் கோவில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் விசாரணை


திருச்சியில் கோவில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் விசாரணை
x
தினத்தந்தி 28 Oct 2019 11:00 PM GMT (Updated: 28 Oct 2019 7:46 PM GMT)

திருச்சியில் கோவில் உண்டியல்களை உடைத்து, அதில் இருந்த பணத்தை மர்ம ஆசாமி திருடி சென்றுவிட்டான். இது தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி,

திருச்சி குடமுருட்டி காவிரி கரையோரம் அய்யாளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக திருச்சி மேலசிந்தாமணியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு வேலை முடிந்து, கோவிலை பூட்டி விட்டு கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு சென்று விட்டார்.

நேற்று காலை வழக்கம்போல கோவிலுக்கு வந்த பூசாரி கோவிலின் மூலஸ்தானத்தில் இருந்த 2 சிறிய உண்டியல்கள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் திருடப்பட்டு இருந்தது. மேலும் கோவிலில் பின்புறத்தில் உள்ள மடப்பள்ளி அறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்களும் சிதறிக்கிடந்தன. உண்டியல்களை உடைத்து பணத்தை திருடிய மர்ம ஆசாமி, வேறு எங்காவது பணம் உள்ளதா? எனவும் தேடியுள்ளான். அங்கிருந்த மேஜை டிராயரை உடைத்தும் அதில் ஏதேனும் உள்ளதா? எனவும் பார்த்து விட்டு, பொருட்களை சிதறி போட்டு விட்டு சென்று உள்ளது தெரியவந்தது.

கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு

கோவிலின் பிரதான நுழைவு வாயில் அருகில் உள்ள மற்றொரு இரும்பு கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த ஆசாமி, கோவிலில் உள்ள உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச்சென்று உள்ளான். இது குறித்து ஜீயபுரம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அங்கு கோவிலில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு ஆசாமி, கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து 2 உண்டியல்களை உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த பதிவை வைத்து போலீசார் திருடனை தேடி வருகிறார்கள்.

Next Story