தகராறில் ஈடுபட்டவரை கைது செய்யக்கோரி மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையம் முற்றுகை


தகராறில் ஈடுபட்டவரை கைது செய்யக்கோரி மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையம் முற்றுகை
x
தினத்தந்தி 29 Oct 2019 5:15 AM IST (Updated: 29 Oct 2019 1:19 AM IST)
t-max-icont-min-icon

தகராறில் ஈடுபட்டவரை கைது செய்யக்கோரி மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டது.

மூலக்குளம்,

முத்திரையர்பாளையம் சேரன்நகர் பகுதியில் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டப்பட்டு வருகிறது. இது குறித்து அதே பகுதியை சேர்ந்த வீரமணி என்பவர் போலீசில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து அந்த கட்டுமான பணி நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக வீரமணிக்கும், அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (வயது 35) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை சந்திரசேகர் அந்த வழியாக சென்றுள்ளார். அப்போது அங்கு வீரமணி நின்று கொண்டு இருந்தார். அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் வீரமணி, சந்திரசேகரை தாக்கியதாக தெரிகிறது. உடனே அவர் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து வீரமணியை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். ஆனால் அவரை கைது செய்யவில்லை.

இது பற்றிய தகவல் அறிந்த உடன் சந்திரசேகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்று இரவு மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் வீரமணியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story