தூத்துக்குடியில் மது விற்ற முன்னாள் ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது
தூத்துக்குடியில் மது விற்ற முன்னாள் ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் கஞ்சா விற்றதாக 2 பேர் சிக்கினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி தென்பாகம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கணேஷ் நகர் பகுதியில் மதுபாட்டில்கள் விற்றுக் கொண்டு இருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கோரம்பள்ளத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ரவி (வயது 54) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல் தாளமுத்துநகர் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது சோட்டையன்தோப்பு பகுதியில் மதுபாட்டில்கள் விற்றுக் கொண்டு இருந்த மட்டக்கடையை சேர்ந்த லட்சுமண பெருமாள் (47) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. முத்தையாபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, முத்தையாபுரம் பல்க் சந்திப்பு பகுதியில் மதுபாட்டில்கள் விற்றுக் கொண்டு இருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (30) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுக்கோட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது புதுக்கோட்டை ஆசிரியர் காலனி பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டு இருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டை சிவன் கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் (36), தூத்துக்குடி கணேஷ் காலனியை சேர்ந்த நாராயணன் (40) என்பதும், கஞ்சா விற்றுக் கொண்டு இருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story