திருச்சி அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து; 7 பயணிகள் உயிர் தப்பினர்


திருச்சி அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து; 7 பயணிகள் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 29 Oct 2019 4:15 AM IST (Updated: 29 Oct 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 7 பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர்.

திருச்சி,

சென்னையில் இருந்து நேற்று காலை திருச்சி வந்த ஆம்னி பஸ் பயணிகள் சிலரை இறக்கி விட்டு, பின்னர் மதுரை நோக்கி புறப்பட்டு சென்றது. பஸ்சை மணப்பாறையை சேர்ந்த டிரைவர் தங்கவேல் ஓட்டிச்சென்றார். பஸ்சில் 7 பயணிகள் மட்டுமே இருந்தனர். திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் அருகே பஸ் சென்றபோது, பஞ்சப்பூரில் இருந்து கார் ஒன்று தேசிய நெடுஞ் சாலைக்கு வந்தது.

கார் திடீரென வந்ததை கண்ட டிரைவர் தங்கவேல், கார் மீது மோதாமல் இருக்க திடீர் பிரேக் போட்டு பஸ்சை திருப்பினார். ஆனால், பஸ் கார் மீது லேசாக மோதிய நிலையில் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், பஸ்சுக்குள் இருந்த பயணிகள் அலறினர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

பெண் படுகாயம்

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் திருச்சி போக்கு வரத்து உதவி கமிஷனர் அருணாசலம் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு அவர்கள், பஸ்சுக்குள் சிக்கி தவித்த பயணிகளை மீட்டு, மாற்று பஸ் மூலம் மதுரைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில், காரில் பயணித்த நாகர்கோவிலை சேர்ந்த வினோத்ராய்-செர்லின் தம்பதியரில் செர்லினுக்கு லேசான காயம் ஏற்பட்டது. செர்லின் அரசு ஊழியர் ஆவார்.

கீழபஞ்சப்பூரில் உள்ள தாயாரை பார்த்து விட்டு, காரில் நாகர்கோவில் திரும்பும்போதுதான் செர்லின் விபத்தில் சிக்கினார். அவரது கணவர் வினோத்ராய் காயமின்றி தப்பினார். விபத்து குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story