மர்மமான முறையில் இறந்த பெண் குழந்தையின் உடல் தோண்டி எடுப்பு: தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை


மர்மமான முறையில் இறந்த பெண் குழந்தையின் உடல் தோண்டி எடுப்பு: தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை
x
தினத்தந்தி 29 Oct 2019 5:15 AM IST (Updated: 29 Oct 2019 1:41 AM IST)
t-max-icont-min-icon

உத்தனப்பள்ளி அருகே மர்மமான முறையில் இறந்த பெண் குழந்தையின் உடல் தோண்டி எடுத்து தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை நடைபெற்றது.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவர் மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சசிகலா(வயது23). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த மாதம் 24-ந்தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை மர்மமான முறையில் இறந்தது. இதையடுத்து கார்த்திக் மற்றும் உறவினர்கள் குழந்தையின் உடலை தோட்டத்தில் அடக்கம் செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் உதயகுமார் சானமாவு கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் அவர், பெண் குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக உத்தனப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சூளகிரி தாசில்தார் ரெஜினா, கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரி குழந்தைகள் நல டாக்டர் விஜயன், டாக்டர் மகேஸ்வரி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் மற்றும் போலீசார், வருவாய்த்துறையினர், மருத்துவ குழுவினர் சானமாவு கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது 45 நாட்கள் நிறைவடைந்த பின் போட வேண்டிய தடுப்பு ஊசியை முன்கூட்டியே போட்டதால் குழந்தை இறந்து விட்டதாக கார்த்திக் தெரிவித்தார். குழந்தை பால் குடித்தபோது மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்ததாக அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து தாசில்தார் முன்னிலையில் குழந்தையின் உடலை தோண்டி எடுக்கப்பட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. மர்மமான முறையில் இறந்த பெண் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story