மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம் 4-வது நாளாக நீடிப்பு: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க பிரார்த்தனை


மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம் 4-வது நாளாக நீடிப்பு: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க பிரார்த்தனை
x
தினத்தந்தி 28 Oct 2019 10:45 PM GMT (Updated: 28 Oct 2019 8:13 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் 4-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு டாக்டர்கள் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை உயிருடன் மீட்க சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

நாமக்கல்,

அனைத்து அரசு டாக்டர்களுக்கும் காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் டாக்டர்களின் பணியிடங்களை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் கடந்த 25-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இவர்களின் போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் 300-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். இருப்பினும் அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு மருத்துவ பிரிவு மற்றும் காய்ச்சல் பிரிவு ஆகியவை வழக்கம்போல் செயல்பட்டன.

இதையொட்டி நேற்று நாமக்கல் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு டாக்டர்கள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதில் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லீலாதரன், கண் டாக்டர் ரங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தின் போது திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித் வில்சன் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, குழந்தையின் புகைப்படத்துடன் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

Next Story