தீபாவளி அன்று இரவு சம்பவம்: ஐ.சி.எப். ஊழியர் வெட்டிக்கொலை
பெரவள்ளூரில் ஐ.சி.எப். ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
திரு.வி.க. நகர்,
சென்னை வில்லிவாக்கம் ராஜமங்கலம் 7-வது தெருவைச் சேர்ந்தவர் ஜானகி ராமன் (வயது 49). இவருடைய மனைவி சசிகலா. இவர்களுக்கு நந்தகுமார் மற்றும் தினேஷ்குமார் என 2 மகன்கள் உள்ளனர்.
ஜானகிராமன் ஐ.சி.எப். தொழிற்சாலையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். ஐ.சி.எப். அண்ணா தொழிற்சங்கத்தின் பொருளாளராகவும், ராஜமங்கலத்தில் உள்ள ஸ்ரீதேவி இளங்காளியம்மன் கோவிலின் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.
வெட்டிக்கொலை
தீபாவளி அன்று இரவு ஜானகிராமன் தனது நண்பர் ஒருவருடன் கொளத்தூர் ஜி.கே.எம். காலனி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் திடீரென அவர்களை வழிமறித்தது.
கையில் அரிவாளுடன் நின்ற அவர்களை கண்டதும் ஜானகிராமனின் நண்பர் தப்பி ஓடிவிட்டார். உடனே மர்மநபர்கள், ஜானகிராமனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஜானகிராமனை அவருடைய மகன்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜானகிராமன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கண்காணிப்பு கேமரா
இதுகுறித்து பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
இளங்காளியம்மன் கோவிலில் தற்போது புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. அந்த பணியில் ஈடுபட்ட ஒருவர் கஞ்சா புகைத்து இருந்ததை அறிந்த ஜானகிராமன், அந்த நபரை கண்டித்தார். இதனால் அந்த நபர், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஜானகிராமனை கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
Related Tags :
Next Story