தஞ்சையில் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம் 4-வது நாளாக நீடிப்பு


தஞ்சையில் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம் 4-வது நாளாக நீடிப்பு
x
தினத்தந்தி 29 Oct 2019 4:30 AM IST (Updated: 29 Oct 2019 3:57 AM IST)
t-max-icont-min-icon

ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் 4-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு டாக்டர்களுக்கும் காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களின் பணியிடங்களை உயர்த்த வேண்டும். அரசு டாக்டர்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் கடந்த 25-ந்தேதி தொடங்கியது.

நேற்று 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நீடித்தது. இதில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை, ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருந்தகம் ஆகியவற்றில் பணியாற்றும் பெரும்பாலான டாக்டர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

நோயாளிகள் அவதி

இதனால் நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டனர். நோயாளிகள் சிரமத்தை போக்கும் வகையில் பயிற்சி டாக்டர்கள் சிலர், பரிசோதனைகளை மேற்கொண்டு மருந்து, மாத்திரைகளை எழுதி கொடுத்தனர்.

வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற டாக்டர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி முன்பு தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் மருத்துவக் கல்லூரி வளாகத்தை சுற்றி கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலத்திலும் ஈடுபட்டனர். ஊர்வலத்துக்கு அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பாலமுரளி, ராஜேஷ்ராம் ஆகியோர் தலைமை தாங்கினர். 

Next Story