வாழப்பாடியில், கோரிக்கைகளை வலியுறுத்தி பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கத்தை விவசாயிகள் முற்றுகை
வாழப்பாடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
வாழப்பாடி,
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் புதுப்பாளையம் பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கம் இயங்கி வருகிறது. இங்கு வாழப்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் கொண்டு வரும் பாலை விற்பனை செய்து வருகின்றனர். பால் கூட்டுறவு சங்க செயலாளராக இருந்த சுவாமிநாதன் சங்கத்தின் இருப்பில் வைத்திருந்த ரூ.6 லட்சத்தை கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, பால் கூட்டுறவு சங்கத்தலைவர் ராஜா, செயலாளர் சுவாமிநாதனை பணி இடைநீக்கம் செய்தார். அவருக்கு மாற்றாக அறிவழகன், புதிய செயலாளராக கடந்த சில தினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து பால் கூட்டுறவு சங்கத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக கூறியும், கையாடல் செய்த பணத்தை திரும்ப வசூலித்து வங்கிக் கணக்கில் செலுத்த கோரியும், விவசாயிகளுக்கு நியாயமான விலை வழங்க கோரியும், சங்கத்தில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டுபிடிக்க தவறியவர்களை கண்டித்தும் நேற்று பால் கூட்டுறவு சங்க அலுவலகத்தின் முன்பு பால் கேன்களுடன் விவசாயிகள் திரண்டனர்.
பின்னர் அவர்கள் பால் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை. இதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story