முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் மரணம் - அமைச்சர்கள் அஞ்சலி
சங்ககிரி அருகே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு முதல்-அமைச்சர், அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சேலம்,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் காளியண்ண கவுண்டர் (வயது 75). இவர், சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே அம்மாபாளையத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை தீபாவளியன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்தவுடன், சேலத்தில் தங்கியிருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக விரைந்து சென்று தனது மாமனாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், செல்லூர் ராஜூ, உதயகுமார் மற்றும் மாநில கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் ஜி.வெங்கடாஜலம், ராஜா ஆகியோரும் இரவில் அங்கு சென்று காளியண்ண கவுண்டரின் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து அன்றைய தினம் இரவு 11 மணிக்கு அவரது உடல் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள நகராட்சி மின் மயானத்திற்கு கொண்டு சென்று தகனம் செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் அதிகாலை வரை அம்மாபாளையத்தில் இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதன்பிறகு அங்கிருந்து சேலம் திரும்பினார். பின்னர் நேற்று காலை 8 மணிக்கு மீண்டும் சேலத்தில் இருந்து அம்மாபாளையத்திற்கு புறப்பட்டு சென்றார்.
இதைத்தொடர்ந்து நேற்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார், அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, திண்டுக்கல் சீனிவாசன், சரோஜா, பெஞ்சமின், முன்னாள் கவர்னர் சதாசிவம், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அம்மாபாளையத்தில் இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆறுதல் தெரிவித்தனர்.
மேலும் தேவூர் பேரூர் அ.தி.மு.க. நகர செயலாளர் குருசாமி, 9-வது வார்டு செயலாளர் பழனிசாமி, மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணன், செங்கோடன், நாச்சியண்ணன் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் காளியண்ணன் குடும்பத்தினருக்கும், முதல்-அமைச்சருக்கும் ஆறுதல் தெரிவித்தனர். இறந்துபோன காளியண்ண கவுண்டருக்கு பாக்கியம் என்ற மனைவியும், ராதா, சுசிலா என்ற 2 மகள்களும், வெங்கடாசலம் என்ற ஒரு மகனும் உள்ளனர். இதில், மூத்த மகள் ராதாவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 24-ந் தேதி இரவு சேலம் வந்தார். அவர் 4 நாட்கள் தங்கியிருக்க திட்டமிட்டிருந்தார். நேற்று காலை சேலத்தில் இருந்து கார் மூலம் கோவை சென்று, அங்கிருந்து விமானத்தில் சென்னை செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் அவரது மாமனார் காளியண்ணன் இறந்துபோனதால் சென்னை செல்வதாக இருந்த முதல்-அமைச்சரின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story