உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளில் அணிவகுத்து நின்ற வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்


உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளில் அணிவகுத்து நின்ற வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 29 Oct 2019 3:45 AM IST (Updated: 29 Oct 2019 6:00 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்ததைத்தொடர்ந்து சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் வெளியூர்களுக்கு திரும்பி சென்றதால், உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளில் அணிவகுத்து நின்ற வாகனங்களால் பலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விக்கிரவாண்டி, 

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 26-ந்தேதி முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் வெளியூர்களில் தங்கியிருந்து வேலை செய்து வந்த தென்மாவட்டங்களைச்சேர்ந்தவர்களும், வெளியூர்களில் தங்கி படித்து வரும் மாணவர்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர்.

இந்த நிலையில் தீபாவளி விடுமுறை நேற்றுடன் முடிந்ததையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்ற அனைவரும் தாங்கள் வேலை பார்த்து வரும் இடங்களுக்கு கார்கள் மற்றும் சிறப்பு பஸ்களில் திரும்பினர்.

இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து வந்ததால் விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதனால் அங்கு பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, செஞ்சி, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பஸ் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அதேபோல் தென்மாவட்டங்களில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னைக்கு சென்ற அனைத்து ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Next Story