குழந்தைகள் விழுந்து சிக்கும் நிலை ஏற்பட்டால் ஆழ்குழாய் அமைத்தவர்கள் மீது கொலை வழக்கு- கைது: ஆர்.டி.ஓ. கடும் எச்சரிக்கை


குழந்தைகள் விழுந்து சிக்கும் நிலை ஏற்பட்டால் ஆழ்குழாய் அமைத்தவர்கள் மீது கொலை வழக்கு- கைது: ஆர்.டி.ஓ. கடும் எச்சரிக்கை
x
தினத்தந்தி 29 Oct 2019 11:15 PM GMT (Updated: 29 Oct 2019 4:44 PM GMT)

குழந்தைகள் விழுந்து சிக்கும் அளவுக்கு ஆழ்குழாய் அமைத்தவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்.டி.ஓ. கடும் எச்சரிக்கை விடுத்தார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் ‘ரிக்’ வாகன உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஈரோடு மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் தலைமை தாங்கினார். செயற்பொறியாளர்கள் ரவிச்சந்திரன், விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஈரோடு ஆர்.டி.ஓ. முருகேசன் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் ‘ரிக்’ வாகன உரிமையாளர்கள் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்படும் போது மேற்கொள்ள வேண்டிய அரசின் சட்ட விதிமுறைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் எடுத்துக்கூறினார்.

அவர் பேசும்போது கூறியதாவது:-

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடந்த சோக நிகழ்வு அனைவருக்கும் தெரியும். அதுபோன்ற ஒரு நிகழ்வு இனிமேல் நடைபெறக்கூடாது என்பதற்காக ஈரோடு மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

‘ரிக்’ வாகன உரிமையாளர்கள் யாராக இருந்தாலும் ஈரோடு மாவட்டத்துக்குள் ஆழ்குழாய் கிணறு தோண்ட வேண்டும் என்றால் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் அல்லது மாநகராட்சி அலுவலகத்தில் ரூ.15 ஆயிரம் செலுத்தி தங்கள் நிறுவனத்தின் பெயரை பதிவு செய்து இருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்து இருப்பவர்கள் மட்டுமே இனிமேல் ஆழ்குழாய் கிணறு தோண்ட முடியும்.

ஆழ்குழாய் கிணறு தோண்டும் நிலத்தின் உரிமையாளர்கள் கண்டிப்பாக அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்பில் ரூ.100 ெசலுத்தி அனுமதி் பெற வேண்டும். அந்த அனுமதி வழங்கப்பட்ட படிவம் மற்றும் கட்டண ரசீது இல்லாவிட்டால் ‘ரிக்’ உரிமையாளர்கள் ஆழ்குழாய் தோண்டக்கூடாது. எக்காரணம் கொண்டும் ஆழ்குழாய் கிணறுகளில் போடப்பட்ட குழாய்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. ஆழ்குழாய் கிணறு தோண்டும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ‘ரிக்’ உரிமையாளர்கள் செய்து கொள்ள வேண்டும். கிணறு தோண்டும் நேரத்தில் இருந்து முடியும்வரை முற்றிலும் ‘ரிக்’ உரிமையாளர்களின் பொறுப்புதான். இதனை உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது, பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தால் ‘ரிக்’ நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்.

தண்ணீர் இல்லாத ஆழ்குழாய்களை கண்டிப்பாக பாதுகாப்பாக மூட வேண்டும். ஒரே நிலத்தில் வெவ்வேறு ஆழ்குழாய்கள் தோண்டுவதாக இருந்தால் ஒவ்வொன்றுக்கும் அனுமதி பெற வேண்டும். அரசின் வளர்ச்சித்திட்ட பணிகளுக்காக மாநகராட்சி, உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை என்று எந்த துறைக்காக ஒப்பந்ததாரர்கள் ஆழ்குழாய் கிணறு தோண்டுவதாக இருந்தாலும் ஒப்புதல் ரசீது இல்லாமல் தோண்டக்கூடாது.

இவ்வாறு ஆணையாளர் எம்.இளங்கோவன் கூறினார்.

‘ரிக்’ உரிமையாளர்கள் சார்பில் சுப்பிரமணி, சதீஸ்குமார், கிருஷ்ணமூர்த்தி, ஜெகதீஸ்வரன் ஆகியோர் பேசினார்கள். அவர்கள் கூறும்போது, ‘குடியிருப்பு பகுதிகளில் பெரிய அளவில் பிரச்சினை இருப்பதில்லை. ஆனால், விவசாய தோட்டங்களில் ஆழ்குழாய் கிணறுகள் தோண்டும்போது தண்ணீர் இல்லை என்றால், குழாய்களை எடுத்து விடுகிறார்கள். 4 அங்குல குழாய் அமைப்பதாக இருந்தால் 7 அங்குல அளவுக்கு கிணறு தோண்ட வேண்டும். அதில் இருந்து குழாயை எடுத்து விட்டால் 7 வயது வரையான குழந்தைகள் உள்ளே சென்று விடும் அபாயம் உள்ளது’ என்று தெரிவித்தனர்.

அதற்கு பதில் அளித்து பேசிய ஈரோடு ஆர்.டி.ஓ. முருகேசன் கூறியதாவது:-

ஆழ்குழாய் கிணற்றில் குழந்தைகள் தவறி விழும் சூழல் ஏற்பட்டால் அது கொலைக்குற்றமாக கருதப்படும். ஆழ்குழாய் தோண்டியவர்கள், நிலத்தின் உரிமையாளர்கள் என 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கொலைக்குற்றத்தில் கைது செய்யப்படுவார்கள். எனவே ‘ரிக்’ உரிமையாளர்கள் தங்கள் பாதுகாப்பை தாங்களே பார்த்துக்கொள்ள வேண்டும். நில உரிமையாளர்கள் தவறு செய்தால் அவர்கள் வழக்கில் சிக்குவார்கள். ஆழ்குழாய் அமைக்க உரிய அனுமதி பெறாமல் இருந்தால் கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ஆர்.டி.ஓ. முருகேசன் கடுமையாக எச்சரிக்கை விடுத்து பேசினார்.

கூட்டத்தில் உதவி ஆணையாளர்கள் அசோக்குமார், சண்முகவடிவு, விஜயா, போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய் ராஜன், மனோகரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story