திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம் ஒன்றியங்களில் பயனற்ற திறந்தவெளி கிணறுகளை மூட வேண்டும் - திட்ட இயக்குனர் உத்தரவு


திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம் ஒன்றியங்களில் பயனற்ற திறந்தவெளி கிணறுகளை மூட வேண்டும் - திட்ட இயக்குனர் உத்தரவு
x
தினத்தந்தி 30 Oct 2019 4:00 AM IST (Updated: 29 Oct 2019 11:12 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம் ஒன்றியங்களில் பயனற்ற திறந்தவெளி கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திட்ட இயக்குனர் ஜெயசுதா உத்தரவிட்டார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பயனற்ற நிலையில் உள்ள திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மூடுவது தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய உதவி பொறியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) டாக்டர் அரவிந்த், ஆணையாளர் தி.அண்ணாதுரை, துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகா‌‌ஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் வரவேற்றார்.

கூட்டத்தில் திட்ட இயக்குனர் பா.ஜெயசுதா பேசியதாவது:-

நமது ஊராட்சிகளில் எங்கெல்லாம் திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் பயனற்ற நிலையில் உள்ளதோ அவற்றை கண்டறிந்து மூடுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து பொதுமக்களுக்கு தண்டோரா போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நமது ஊராட்சிகளில் எங்குமே பயனற்ற திறந்தவெளி கிணறுகள் இல்லை என உறுதிப்படுத்த வேண்டும். இதுகுறித்து அறிக்கை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.

இதை மீறி ஊராட்சிகளில் பயனற்ற திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தனியார் திறந்தவெளி மற்றும் ஆழ்துளை கிணறுகள் பயனற்ற நிலையில் இருந்தால் அதையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் உரிமையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும்.

மேலும் மழை காலம் என்பதால் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு ஊராட்சியிலும் காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்வதோடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்காக நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 69 ஊராட்சி செயலாளர்கள், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 47 ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேலு நன்றி கூறினார்.

Next Story