திண்டிவனத்தில் பரபரப்பு, அரசு மருத்துவமனையை நோயாளிகள் முற்றுகையிட்டு போராட்டம்
திண்டிவனம் அரசு மருத்துவமனையை நோயாளிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம்,
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களை நியமிக்க வேண்டும், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் இளநிலை மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்புக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். அரசு டாக்டர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்று 5-வது நாளாக நீடித்தது.
இதனால் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அரசு டாக்டர்கள் நேற்று பணிக்கு வரவில்லை. இதனால் நோயாளிகளுக்கு மருத்துவமனை ஊழியர்கள் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.
இதனால் பயந்து போன நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த ரோஷணை போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்
அப்போது கோரிக்கை தொடர்பாக சப்-கலெக்டரிடம் மனு கொடுக்கும் படி போராட்டக்காரர்களிடம் போலீசார் அறிவுறுத்தினார்கள். இதையடுத்து நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story