வலங்கைமானில் குப்பை அள்ளும் வாகனங்களை ரோட்டில் நிறுத்தி துப்புரவு பணியாளர்கள் மறியல்


வலங்கைமானில் குப்பை அள்ளும் வாகனங்களை ரோட்டில் நிறுத்தி துப்புரவு பணியாளர்கள் மறியல்
x
தினத்தந்தி 30 Oct 2019 4:30 AM IST (Updated: 30 Oct 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

வலங்கைமான் கடைத்தெருவில் துப்புரவு பணியாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் குப்பை அள்ளும் வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தி வைத்து இருந்தனர்.

வலங்கைமான்,

வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் தீபாவளி மற்றும் மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து தெருக்களில் குப்பைகளை அகற்றும் பணியிலும், டெங்கு கொசு உற்பத்திக்கான கழிவுநீரை அப்புறப்படுத்துவதிலும் துப்புரவு பணியாளர்கள் நேற்று ஈடுபட்டு இருந்தனர். இதில் தற்காலிக பணியாளர்கள் உள்பட பலர் பல்வேறு இடங்களில் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

வலங்கைமான் மகாமாரியம்மன் கோவில் அருகே வரதராஜன்பேட்டை தெருவில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது பணியாளர்களை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் திடீரென்று தாக்கியதாக தெரிகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

திடீர் சாலைமறியல்

இதையடுத்து பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் அனைவரும் பேரூராட்சி அலுவலக வாயிலில் கும்பகோணம்-மன்னார்குடி மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது குப்பைகள் அள்ளும் வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தி வைத்திருந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்த தாசில்தார் இஞ்ஞாசிராஜ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். மேலும் பேரூராட்சி அலுவலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்தனர். இதனையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் கும்பகோணம்-மன்னார்குடி சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story