தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சி அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம்


தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சி அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 30 Oct 2019 4:15 AM IST (Updated: 30 Oct 2019 1:17 AM IST)
t-max-icont-min-icon

தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) நடக்கவிருப்பதை முன்னிட்டு அண்ணாசாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அண்ணா சாலை நந்தனம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக அதிக எண்ணிக்கையிலான தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இன்று (புதன்கிழமை) காலை 7 மணி முதல் போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

அண்ணா சாலையில், சைதாப்பேட்டையிலிருந்து நந்தனம் மற்றும் சேமியர்ஸ் சாலை நோக்கி வரக்கூடிய வாகனங்கள், அண்ணா சாலை லிங்க் சாலை சந்திப்பில் இடது புறமாக திருப்பப்பட்டு, லிங்க் சாலை மாடல் அட்மேன்ட் ரோடு, வி.என்.சாலை, தெற்கு போக் சாலை வடக்கு போக் சாலை, தியாகராயா சாலை, எல்டாம்ஸ் சாலை, எஸ்.ஐ.இ.டி.- கே.பி. தாசன் சாலை வழியாக செல்லலாம்.

தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை

அண்ணா சாலையில் சைதாப்பேட்டையில் இருந்து நந்தனம் வழியாக சேமியர்ஸ் சாலை நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள் நந்தனம் சந்திப்பில் இடது புறமாக வெங்கட் நாராயணா சாலை நோக்கி திருப்பிவிடப்பட்டு தெற்கு போக் சாலை, வடக்கு போக் சாலை, தியாகராயா சாலை, எல்டாம்ஸ் சாலை, எஸ்.ஐ.இ.டி., கே.பி. தாசன் சாலை வழியாக செல்லலாம்.

அண்ணா சாலையில் தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள் அண்ணா சாலை- செனடாப் ரோடு சந்திப்பில் திருப்பி விடப்பட்டு ஜி.கே. மூப்பனார் மேம்பாலம் வழியாக கோட்டூர்புரம் பாலம், காந்தி மண்டபம் சாலை, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை வழியாக செல்லலாம்.

ஜி.கே. மூப்பனார் மேம்பாலம் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டு, அண்ணா சாலை- செனடாப் ரோடு சந்திப்பில் இருந்து வாகனங்கள் கோட்டூர்புரம் நோக்கி அனுமதிக்கப்படும். கோட்டூர்புரத்தில் இருந்து அண்ணா சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. சேமியர்ஸ் சாலையிலிருந்து சைதாப்பேட்டை நோக்கிச் செல்லக் கூடிய வாகனங்கள் டர்ன் புல்ஸ் சந்திப்பில் இருந்து செனடாப் ரோடு சந்திப்பு ஜி.கே. மூப்பனார் மேம்பாலம், காந்தி மண்டபம் சாலை, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை வழியாக செல்ல திருப்பி விடப்படும்.

போக்குவரத்து அதிகரித்தால்...

போக்குவரத்து அதிகமாக இருக்கும் பட்சத்தில், தேவை ஏற்பட்டால் மேலும் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும். குறிப்பாக அண்ணா சாலையில் கிண்டியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் சின்னமலை சந்திப்பில் இருந்து நந்தனம் நோக்கி அனுமதிக்கப்படாமல், தாலுக்கா ஆபீஸ் சாலை, சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம் சாலை வழியாக திருப்பி விடப்படும்.

அண்ணா சாலையில் இருந்து நந்தனம் நோக்கி வரக்கூடிய வாகனங்கள் சி.ஐ.டி. நகர் முதலாவது மெயின் ரோடு- அண்ணா சாலை சந்திப்பில் திருப்பி விடப்பட்டு, சி.ஐ.டி நகர் முதலாவது மெயின் ரோடு, தெற்கு உஸ்மான் சாலை, மேட்லி சந்திப்பு, பர்கிட் ரோடு, தணிகாசலம் ரோடு, மெலனி ரோடு, தெற்கு போக் சாலை, வடக்கு போக் சாலை வழியாக அண்ணா சாலையை சென்றடையலாம். கத்திப்பாரா மேம்பாலத்தில் வரும் வாகனங்கள் சிப்பெட், அம்பாள் நகர், காசி மேம்பாலம், வடபழனி, ஆற்காடு ரோடு வழியாக அண்ணா சாலை நோக்கி செல்ல திருப்பிவிடப்படுவார்கள்.

பொதுமக்கள் ஒத்துழைப்பு

தாம்பரத்தில் இருந்து கத்திப்பாரா நோக்கி வரக்கூடிய சரக்கு வாகனங்கள் கத்திப்பாரா சந்திப்பில் சிப்பெட் நோக்கி திருப்பி விடப்படும். அதேபோல் திருநீர்மலை மேம்பாலத்தில் வரும் வாகனங்கள் பைபாஸ் நோக்கி திருப்பி விடப்படும். வெட்ரன் லைனில் 200 அடி சாலையில் வரும் வாகனங்கள் பழைய மாமல்லபுரம் சாலை நோக்கி திருப்பி விடப்படும். தாம்பரத்தில் இருந்து வரும் வாகனங்கள் பைபாஸ் நோக்கி திருப்பி விடப்படும். வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story