திட்டக்குடியில், ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு


திட்டக்குடியில், ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 29 Oct 2019 9:45 PM GMT (Updated: 29 Oct 2019 8:04 PM GMT)

திட்டக்குடியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திட்டக்குடி, 

திட்டக்குடி தாசில்தார் அலுவலகம் எதிரே தனியார் வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியின் முன்பகுதியில் ஏ.டி.எம்.மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம்.மையத்திற்கு நேற்று காலை சிலர் பணம் எடுக்க சென்றனர். அப்போது அங்குள்ள ஏ.டி.எம். எந்திரத்தின் ஒரு பகுதி உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த தகவலின் பேரில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் சுபிக்‌ஷா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நேற்று அதிகாலையில் மர்மநபர் ஒருவர் ஏ.டி.எம்.மையத்திற்குள் புகுந்து அங்கிருந்த எந்திரத்தை இரும்பு கம்பியால் உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் ஏ.டி. எம். எந்திரத்தின் ஒரு பகுதியை மட்டும் மர்மநபரால் உடைக்க முடிந்தது. அவரால் முழுமையாக எந்திரத்தை உடைக்க முடியாததால் அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பிச்சென்றது தெரிந்தது.

மேலும் மோப்ப நாயிடம் இருந்து தப்பிப்பதற்காக ஏ.டி. எம். மையத்தில் மிளகாய் பொடியை தூவிவிட்டு சென்றதும் தெரிந்தது. இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.26 லட்சம் கொள்ளை போகமல் தப்பியது.

தொடர்ந்து போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதில் மர்மநபர் ஒருவர் கைலியால் முகத்தை மூடியவாறு எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற காட்சி பதிவாகி இருந்தது. அதனை கொண்டு மர்மநபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story