பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்


பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 29 Oct 2019 10:30 PM GMT (Updated: 29 Oct 2019 8:16 PM GMT)

பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற குருப் பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் உள்ள புகழ்பெற்ற பிரம்மபுரீஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோவிலில் நவகிரகங்களில் ஒன்றான குரு, விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைந்ததையொட்டி கோவிலில் எழுந்தருளி உள்ள தட்சிணாமூர்த்திக்கு நேற்று அதிகாலை வினாயகர் பூஜை, அனுக்கை, கும்பபூஜை, திரவியஹோமம், மூலமந்திர ஜபம், பூர்ணாகுதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தட்சிணாமூர்த்திக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கலசதீர்த்த அபிஷேகமும் நடந்தது. பின்பு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஹோமபூஜைகளை திருச்செங்கோடு சுவாமிநாத சிவாச்சாரியார் குழுவினர் நடத்தி வைத்தனர்.

பரிகார பூஜை

குருப்பெயர்ச்சி விழாவில் ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ராசிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பரிகார பூஜை செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் அரியலூர் உதவி ஆணையர் கருணாநிதி, பெரம்பலூர் மதனகோபாலசுவாமி மற்றும் பிரம்மபுரீஸ்வரர் கோவில் நிர்வாக அலுவலர் மணி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

கச்சேரி வினாயகர்

பெரம்பலூரில் தாலுகா அலுவலக சாலையில் அமைந்துள்ள கச்சேரி வினாயகர் கோவிலில் குருப்பெயர்ச்சியையொட்டி நேற்று இரவு சிறப்பு ஹோமமும், நவகிரக சன்னதியில் உள்ள குருபகவானுக்கு அபிஷேக ஆராதனையும் நடந்தது. யாகசாலை பூஜைகளை கோவில் அர்ச்சகர் சஞ்சீவி பிரசாத் மற்றும் சிவாச்சாரியார்கள் நடத்திவைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு குருபகவானை வழிபட்டனர். எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோவிலில் குருப்பெயர்ச்சியையொட்டி தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகங்களும், சந்தனக்காப்பு அலங்காரமும் நடந்தது. இதனை தொடர்ந்து கொண்டைக்கடலை மாலை மற்றும் மலர்மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

குரும்பலூர்

இதேபோல் பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள தர்மசம்வர்த்தினி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழாவையொட்டி தட்சிணாமூர்த்திக்கு பால், பழம், பன்னீர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்கள் உள்பட பல்வேறு அபிஷேகங்களும், மகாதீபாராதனையும் நடந்தது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Next Story