திருச்சியில் 5-வது நாளாக டாக்டர்கள் வேலைநிறுத்தம்: மருத்துவ பயிற்சி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர்


திருச்சியில் 5-வது நாளாக டாக்டர்கள் வேலைநிறுத்தம்: மருத்துவ பயிற்சி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர்
x
தினத்தந்தி 29 Oct 2019 11:00 PM GMT (Updated: 29 Oct 2019 8:59 PM GMT)

திருச்சியில் 5-வது நாளாக டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நேற்று மருத்துவ பயிற்சி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

திருச்சி,

காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டாக்டர்களின் பணியிடங்களையும் உயர்த்த வேண்டும் அரசு டாக்டர்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீட்டினை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் கடந்த 25-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன்படி திருச்சி மாவட்ட அரசு டாக்டர்களும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, மணப்பாறை அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி உள்ளிட்ட அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருந்தகம் என 500-க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள் பணிக்கு செல்லாமல் நேற்று 5-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

இதையொட்டி அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர்கள் அருளஸ்வரன், பாஸ்கர், தங்கவேலு, பிரபு உள்ளிட்ட அரசு டாக்டர்கள் காலை 11 மணிக்கு திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் மருத்துவ கல்லூரி வளாகத்தில் திரண்டனர். பின்னர் அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவ கல்லூரியில் படித்து வரும் மருத்துவ பயிற்சி மாணவ-மாணவிகளும் நேற்று போராட்ட களத்தில் குதித்தனர். வருங்கால மருத்துவ மாணவர்களின் நலனுக்காகவே அரசிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே வேளையில் நேற்று அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகளுக்கு மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இதுபற்றி திருச்சி மாவட்ட அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மருத்துவ பயிற்சி மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:-

அவசர சிகிச்சை, பிரேத பரிசோதனையை புறக்கணிப்போம்

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகளுக்கு மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் மட்டுமே சிகிச்சை அளித்தனர். நமது போராட்டத்தின் காரணத்தை புரிந்து கொண்டு அவர்களின் மனமும் மாறும். அரசு கொடுத்த வாக்குறுதிபடி கோரிக்கைகளை நிறைவேற்றாமல் வேறு முயற்சிகளில் ஈடுபட்டால், அவசர சிகிச்சை மற்றும் பிரேத பரிசோதனை செய்வதையும் புறக்கணிப்பு செய்து போராட்டத்தை வலுப்பெற செய்வோம். இதனால், அரசுக்கு ஒரு இக்கட்டான நிலையை உருவாக்குவோம்.

அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் முக்கியமான அறுவை சிகிச்சை பணிகளை மேற்கொண்டுதான் வருகிறோம். டாக்டர் மணிமாறன் கையெழுத்து போடாமலேயே, 7 அவசர அறுவைசிகிச்சைகளை அரசு ஆஸ்பத்திரியில் மேற்கொண்டு இருக்கிறார். இது டாக்டர்களின் சேவையை காட்டுகிறது. மேலும் காய்ச்சல் பிரிவு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எனவே, அரசானது எங்களை மோசமான போராட்ட நிலைக்கு தள்ளாமல் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

Next Story