கொடிக்கம்பியில் துணி காய வைத்தபோது, மின்சாரம் தாக்கி கேபிள் டி.வி. ஊழியர் சாவு
பரமத்தி வேலூர் அருகே, கொடிக்கம்பியில் துணி காய வைத்தபோது, மின்சாரம் தாக்கி கேபிள் டி.வி. ஊழியர் இறந்தார்.
பரமத்தி வேலூர்,
பரமத்தி வேலூர் தாலுகா வீரணம்பாளையம் சுண்டப்பனை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சவுந்தரராஜன் (வயது 24). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கேபிள் டி.வி. நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இவர் குருபெயர்ச்சியையொட்டி கோவிலுக்கு செல்வதற்காக நேற்று அதிகாலை 3.30 மணியளவில் எழுந்து குளித்து விட்டு துணிகளை கொடிக்கம்பியில் காய வைத்து உள்ளார். அப்போது அந்த கம்பி வழியாக திடீரென மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார்.
அவரது அலறல் சத்தத்தை கேட்டு அவரது பெற்றோர் ஓடி வந்து பார்த்தனர். பின்னர் அவரை கரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து சவுந்தரராஜனின் உடல் பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனைக்க பிறகு அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொடிக்கம்பியில் அந்த வழியாக சென்ற மின்சார கம்பி பட்டு மின்சாரம் பாய்ந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story