சட்டசபை இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தால் பா.ஜனதா அரசுக்கு ஆதரவு அளிக்க குமாரசாமி திட்டம்


சட்டசபை இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தால் பா.ஜனதா அரசுக்கு ஆதரவு அளிக்க குமாரசாமி திட்டம்
x
தினத்தந்தி 30 Oct 2019 5:56 AM IST (Updated: 30 Oct 2019 5:56 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்தால் பா.ஜனதா அரசுக்கு ஆதரவு அளிக்க குமாரசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடைபெற்றது. அந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அதையடுத்து 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா அரசு அமைந்துள்ளது. இந்த அரசு அமைந்து 3 மாதங் கள் ஆன நிலையில், சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு வருகிற டிசம்பர் மாதம் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது. சட்டசபையின் தற்போதைய பலம் 207 ஆக உள்ளது. 15 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டால், சட்டசபையின் பலம் 222 ஆக அதிகரிக்கும். அப்போது பா.ஜனதாவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 112 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. ஆனால் தற்போது பா.ஜனதாவுக்கு ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ. உள்பட 106 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. இன்னும் 6 எம்.எல்.ஏ.க் களின் ஆதரவு தேவைப்படுகிறது.

அதன்படி இடைத்தேர்தலில் பா.ஜனதா குறைந்தபட்சம் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் பா.ஜனதா உள்ளது. ஒருவேளை 6 தொகுதிகளில் வெற்றி பெறாவிட்டால், ஆட்சி கவிழும் நிலை ஏற்படும். அந்த சூழ்நிலையில் பா.ஜனதா அரசை ஆதரிக்க குமாரசாமி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏனென்றால் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்தால் தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவுவதை தடுக்க முடியும் என்று குமாரசாமி கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் குமாரசாமி, பா.ஜனதா ஆட்சியை கவிழ விட மாட்டேன் என்று கூறியிருக் கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story