கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது தேவேகவுடா அறிவிப்பு


கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது தேவேகவுடா அறிவிப்பு
x
தினத்தந்தி 30 Oct 2019 12:29 AM GMT (Updated: 30 Oct 2019 12:29 AM GMT)

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா உள்பட எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்று தேவேகவுடா அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள கே.ஆர்.புரம், யஷ்வந்தபுரம், மகாலட்சுமி லே-அவுட், அதானி, காக்வாட், எல்லாப்பூர், கோகாக், இரேகூர், ராணிபென்னூர், விஜயநகர், சிக்பள்ளாப்பூர், சிவாஜிநகர், ஒசக்கோட்டை, கே.ஆர்.பேட்டை, உன்சூர் ஆகிய 15 தொகுதிகளுக்கு வருகிற டிசம்பர் மாதம் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதாவுடன் கூட்டணி கிடையாது என்று தேவேகவுடா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபைக்கு கடந்த 2018-ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி தான் எனது வீட்டுக்கு வந்து, ஆட்சி அமைக்க வலியுறுத்தியது. தொடக்கத்தில் நான் அதை நிராகரித்தேன். காங்கிரசின் நீண்ட நேர வலியுறுத்தலுக்கு பிறகு நான் காங்கிரஸ் விடுத்த கூட்டணி வேண்டுகோளை ஏற்றுக்கொண்டேன்.

எங்கள் கட்சிக்கும், காங்கிரஸ், பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இரு கட்சிகளும் நம்பத்தகுந்தது அல்ல. அக்கட்சியினர் தேவைப்படும்போது எங்களை பயன்படுத்திக் கொண்டு, பிறகு அழித்துவிடுவார்கள். இரு கட்சிகளும் ஒரே மாதிரியான குணம் கொண்டவை. அதனால் சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா உள்பட எந்த கட்சியுடனும் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம். இடைத்தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி தனித்து போட்டியிடும்.

பிரதமர் மோடி என்னை பாராட்டி டுவிட்டரில் கருத்து தெரிவித்ததால், நான் பா.ஜனதாவுடன் மென்மையான போக்குடன் செயல்படுவதாக கூறுவது தவறு. அதுபோன்று எதுவும் இல்லை. இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

Next Story