ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் வங்கிக் கணக்கில் ரூ.7 லட்சம் மோசடி
கடன் பெற்றுத் தருவதாகக்கூறி ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் வங்கிக்கணக்கில் ரூ.7 லட்சம் மோசடி செய்துவிட்டதாக தபால்காரர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.
வேலூர்,
காட்பாடி தாலுகா ஒட்டந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் தாஸ். கர்நாடகாவில் மின்சார வாரியத்தில் வேலைபார்த்து இவர் ஓய்வு பெற்றுள்ளார். குடும்பத்தினர் யாரும் இல்லாததால் ஒட்டந்தாங்கலில் தனியாக வசித்து வருகிறார்.
இவருக்கும், அதேபகுதியை சேர்ந்த தபால்காரர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தாஸ் மாதம் ரூ.42 ஆயிரம் ஓய்வூதியம் பெற்று வருகிறார். ஆனால் அவருக்கு வங்கி ஏ.டி.எம். கார்டு பயன்படுத்த தெரியாததால் ஏ.டி.எம்.கார்டு, வங்கி பாஸ்புத்தகம் ஆகியவற்றை கடந்த 2 வருடங்களாக தபால்காரரிடம் கொடுத்து வைத்துள்ளார்.
அவர்தான், தாஸ் பெயருக்கு வரும் ஓய்வூதியத்தை வங்கியில் இருந்து எடுத்து கொடுத்துள்ளார். இந்த நிலையில் தாசுக்கு பணம் தேவைப்பட்டதால் அவருக்கு காட்பாடியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.7 லட்சம் கடன்பெற்று தருவதாக தபால்காரர் கூறி உள்ளார். அதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளார். அப்போது தாசிடமிருந்து அவர் கையெழுத்திட்ட காசோலை ஒன்றை தபால்காரர் வாங்கி வைத்துள்ளார்.
கடந்த 24-ந் தேதி தாஸ் வங்கி கணக்கில் ரூ.7 லட்சம் வந்துள்ளது. இதை அறிந்த தபால்காரர், தாசிடமிருந்து பெற்ற காசோலையை வங்கியில் கொடுத்து ரூ.7 லட்சத்தை பெற்றுள்ளார். பணம் வந்துள்ளதை அறிந்த தாஸ் அதை எடுப்பதற்காக தபால்காரரிடம் சென்று கேட்டுள்ளார். அதற்கு அவர் தற்போது வங்கிகளுக்கு தீபாவளி விடுமுறை, தீபாவளி முடிந்ததும் எடுக்கலாம் என்று கூறி அனுப்பி உள்ளார்.
இந்த நிலையில் தீபாவளி முடிந்ததும் தாஸ் சென்று கேட்டபோது தபால்காரர் பணத்தை எடுத்துக்கொண்டதாகவும், அதை தரமுடியாது என்றும் கூறி உள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த தாஸ் நேற்று வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட தபால்காரர் மீது புகார் செய்துள்ளார்.
Related Tags :
Next Story