திருமருகல் அருகே தடையின்றி மின்சாரம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்


திருமருகல் அருகே தடையின்றி மின்சாரம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 31 Oct 2019 4:30 AM IST (Updated: 30 Oct 2019 11:06 PM IST)
t-max-icont-min-icon

திருமருகல் அருகே தடையின்றி மின்சாரம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருமருகல்,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மேலப்போலகம் கிராமத்திற்கு தடையில்லா மின்சாரம் மற்றும் பஸ் வசதி கேட்டு கிராம மக்கள் மேலபோலகம் மெயின் சாலை கடைத்தெருவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போ மேலப்போலகம் கிராமத்தில் அடிக்கடி மின்சாரம் தடைபடுவதால் கிராமமே இருளில் மூழ்கி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மின் வாரிய அலுவலகத்திற்கு போன் செய்தால் யாரும் எடுப்பது இல்லை. எனவே மின்வாரிய அலுவலகத்தில் தொலைபேசியை 24 மணி நேரமும் இயங்க செய்ய வேண்டும். மேலப்போலகம் கிராமத்திற்கு தொடர்ந்து தடை இல்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும். இந்த பகுதிக்கு இந்த பகுதியை சேர்ந்த மின் ஊழியரை உடனே நியமிக்க வேண்டும். திருமருகல் துணை மின் நிலையத்தில் 9 ஆண்டுகளாக காலியாக உள்ள பணியிடத்திற்கு உதவி மின் பொறியாளரை உடனடியாக நியமிக்க வேண்டும்.

நாகையில் இருந்து அண்ணா மண்டபம், போலகம் வழியாக பூந்தோட்டம் செல்லும் அரசு பஸ் எப்போதாவது வருகிறது. இதனால் கிராம மக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த பஸ்சை தொடர்ந்து வாரம் முழுவதும் இயக்க வேண்டும். நாகையில் இருந்து அண்ணா மண்டபம் போலகம் வழியாக மயிலாடுதுறை சென்று கொண்டிருந்த தடம் எண் 433 என்ற அரசு பஸ் இயங்காமல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பஸ்சை தொடர்ந்து இந்த வழியாக இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் கோஷங்கள் எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் போராட்டகாரர்கள் மின்வாரிய அதிகாரிகள் வரவேண்டும் எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

பின்னர் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு வந்து போராட்டக்காரர்களின் கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story