அதிககட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை கண்டுபிடிக்க கமிட்டி - தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் பேட்டி


அதிககட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை கண்டுபிடிக்க கமிட்டி - தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் பேட்டி
x
தினத்தந்தி 30 Oct 2019 11:15 PM GMT (Updated: 30 Oct 2019 6:40 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை கண்டுபிடிக்க கமிட்டி அமைக்கப்படும் என தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் கூறினார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் விஜயகார்த்திகேயன் முன்னிலை வகித்தார். தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

குழந்தைகளின் நலனை கண்காணிக்கும் வகையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் செயல்பட்டு வருகிறது. இதன் நோக்கம் குழந்தைகளுக்கு போதை பொருளால் ஏற்படும் பிரச்சினைகளை தடுத்திடவும், பாலியல் ரீதியான குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்தும், இளைஞர் நீதி (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டம் குறித்தும் மற்றும் சமூகத்தில் குழந்தைகளின் நலன் கருதி குழந்தைகளுக்கு போதை பொருள் விற்பனை செய்வதை தடை செய்வது குறித்தும் கண்காணிக்கப்படுவதாகும்.

மேலும், பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் தங்களது குறைகள் மற்றும் பிரச்சினைகளை தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இலவச தொலைபேசி எண்ணான 1098 என்ற எண்ணை குழந்தைகளுக்கு முழுமையாக தெரிவித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுபோல் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து குழந்தைகள் நலன் சார்ந்த துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து தவறாக பயன்படுத்தும் போதை பொருள்கள் விற்பனை செய்வதற்கு ஏதுவாக உள்ள வழிவகைகளை கண்டறிய திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் இதன் மூலமாக போதை பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்தும், பள்ளிக்கல்வித்துறை, போலீசார், பொது மருத்துவத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிதிட்டம், சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகள் வாரியாக விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், போலீஸ் துணை கமிஷனர் உமா, தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் மோகன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுந்தர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ், மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா, குழந்தைகள் நலக்குழு தலைவர் பிரேமலதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுக்கோட்டையில் குழந்தைகள் போதை ஊசி பயன்படுத்தியதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஊசி மற்றும் மருந்து தமிழகத்திற்கு மிகவும் புதியது. இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூரில் இருந்து இந்த ஊசிகளுக்கான மருந்துகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. பல லட்சம் ரூபாய்க்கு இந்த மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தினால் 24 மணி நேரமும் போதை இருக்கும். குழந்தைகளை குறி வைத்து இந்த மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. இது தொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் அதிகளவில் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை கண்டுபிடிக்க கமிட்டி அமைக்க அறிவுறுத்தியுள்ளோம். போதை பொருட்கள் தமிழகத்திற்குள் கொண்டு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் இதுவரை 187 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் ஊசிகளுக்கு பதிலாக தற்போது போதை மாத்திரைகளை அதிகளவு பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story