மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் விழுந்த 3 வயது குழந்தை பலி


மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் விழுந்த 3 வயது குழந்தை பலி
x
தினத்தந்தி 30 Oct 2019 11:15 PM GMT (Updated: 30 Oct 2019 7:18 PM GMT)

விருதுநகர் அருகே மழை நீர் சேகரிப்பு தொட்டிக்குள் விழுந்த 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள ஓ.கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. அவருடைய மனைவி நேத்ராதேவி, இவர்களது 3 வயது மகன் ருத்ரன். இவன் ஓ.கோவில்பட்டி அருகே உள்ள ஒண்டிப்புலிநாயக்கனூரில் உள்ள அவனது தாத்தா மணிகண்டன் என்பவரது வீட்டிற்கு வந்திருந்தான். நேற்று காலை அவன் தாத்தா வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது மணிகண்டனின் வீட்டின் அருகே இருந்த மழை நீர் சேகரிப்பு தொட்டியில் நீர் நிரம்பி இருந்தது. குழந்தை ருத்ரன் அந்த தொட்டிக்குள் தவறி விழுந்தான். விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என தேடிய போது, அவன் மழை நீர் சேகரிப்பு தொட்டிக்குள் விழுந்தது தெரியவந்தது. உடனடியாக அவனை மீட்டு கன்னிச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அவனை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ருத்ரன் நீரில் மூழ்கியதில் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. இந்த சம்பவம் தொடர்பாக ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை சுஜித் தவறி விழுந்து இறந்த சம்பவம் ஏற்படுத்திய சோகம் மறையும் முன்பு விருதுநகர் அருகே 3 வயது குழந்தை ருத்ரன் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு ஏற்பாடு செய்வதுடன் மழை நீர் சேகரிப்பு தொட்டிகளையும் பாதுகாப்பான முறையில் அமைக்க உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Next Story