நடுஹட்டி, தலையட்டியில், அதிக மின் அழுத்தம் காரணமாக டி.வி.க்கள் வெடித்து சிதறின
நடுஹட்டி, தலையட்டியில் அதிக மின் அழுத்தம் காரணமாக டி.வி.க்கள் வெடித்து சிதறின.
மஞ்சூர்,
மஞ்சூர் அருகே நடுஹட்டி விநாயகர் கோவில் பகுதியில் மின்மாற்றி ஒன்று உள்ளது. இந்த மின்மாற்றியில் இருந்து நடுஹட்டி, தலையட்டி ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 300 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
கடந்த 26-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு திடீரென அந்த மின்மாற்றி வெடித்து சிதறியது. இதனால் மேற்கண்ட கிராமங்களில் மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து 27-ந் தேதி மாலை 4 மணியளவில் பாதகண்டி பகுதியில் உள்ள மின்மாற்றியில் இருந்து நடுஹட்டி, தலையட்டி ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிக மின் அழுத்தம் காரணமாக நடுஹட்டி, தலையட்டி ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகளில் டி.வி.க்கள்(தொலைக்காட்சி பெட்டிகள்) வெடித்து சிதறின. மேலும் மின் அடுப்புகள், மின் விளக்குகள் பழுதாகின. இது தவிர மின்வினியோகமும் தடைபட்டது. இதனால் மேற்கண்ட 2 கிராமங்களும் இருளில் மூழ்கின. இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். எனவே வெடித்து சிதறிய மின்மாற்றியை அப்புறப்படுத்திவிட்டு, உடனடியாக புதிய மின்மாற்றி அமைத்து மின் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்சாரத்துறையினருக்கு அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story