நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை: குன்னூர் சாலைகளில் பாறைகள் உருண்டு விழுந்தன - வீடு இடிந்து முதியவர் காயம்


நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை: குன்னூர் சாலைகளில் பாறைகள் உருண்டு விழுந்தன - வீடு இடிந்து முதியவர் காயம்
x
தினத்தந்தி 30 Oct 2019 10:15 PM GMT (Updated: 30 Oct 2019 7:39 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் குன்னூர் சாலைகளில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. ஊட்டியில் வீடு இடிந்து முதியவர் காயம் அடைந்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. ஊட்டியில் நேற்று பெய்த மழையால் மேரீஸ்ஹில் பகுதியில் மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. அதன் கிளை, அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கார் மீதும் விழுந்தது. இதனால் காரின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. ஓல்டு ஊட்டி பகுதியில் நடைபாதை உடைந்து, அந்தரத்தில் தொங்குகிறது. அதன் வழியாக மக்கள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். மேலும் அங்குள்ள பாத்திமா என்பவரது வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்தது. இதில் வீட்டின் மேற்கூரை சேதம் அடைந்தது. அப்போது வீட்டின் மேல்பகுதியில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், மரத்தை வெட்டி அகற்றினர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது.

ஊட்டி ரோகிணி சந்திப்பு பகுதியில் நேற்று மாலை 3 வீடுகளின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் ஒரு வீட்டில் உள்ளே இருந்த பசுவையா(வயது 80) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி காயம் அடைந்தார். அதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீடுகள் இடிந்ததை வருவாய்த்துறையினர் பார்வையிட்டனர்.

மழை காரணமாக கோத்தகிரி பஸ் நிலைய கட்டிடத்தின் மீது 3-வது முறையாக மண் சரிந்து விழுந்தது. மேலும் கன்னிகா தேவி காலனியில் தங்கராஜ், கிருஷ்ணாபுதூரில் பழனியம்மாள், குமாரமுடியில் ஹால்துரை, பிங்கலபாடிகாயில் பெருமாள், கமலா மற்றும் காளான் ஆகியோரது வீடுகள் இடிந்து விழுந்தன. அதனை வருவாய்த்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.4 ஆயிரத்து 100 நிவாரண தொகை வழங்கினர்.

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய கனமழை கொட்டியது. இந்த மழை நேற்றும் நீடித்தது. கனமழை காரணமாக குன்னூர்-சேலாஸ் சாலையில் சின்ன கரும்பாலம் என்ற இடத்தில் 2 ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. சுமார் 50 அடி உயரத்தில் இருந்து பாறைகள் விழுந்ததால், சாலையில் விரிசல் ஏற்பட்டது. அந்த சமயத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த வாகனங்களும் வராததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறையினர் ராட்சத பாறைகளை உடைத்து, அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு பாறைகள் உடைக்கப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டன. அதன்பிறகு மீண்டும் அந்த வழியே போக்குவரத்து தொடங்கியது. இதனிடையே குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் டென்ட்ஹில் பகுதியில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. மேலும் எடப்பள்ளி-பந்துமி சாலையில் மரம் முறிந்து விழுந்தது. அதனை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அகற்றினர்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழை அளவு(மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:-

ஊட்டி-19.1, நடுவட்டம்-6, கிளன்மார்கன்-14, கல்லட்டி-7, குந்தா-22, அவலாஞ்சி-21, கெத்தை-25, எமரால்டு-17, கிண்ணக்கொரை-40, அப்பர்பவானி-21, குன்னூர்-49, பர்லியார்-20, கேத்தி-23, கோத்தகிரி-33, கோடநாடு-39 மழை பதிவாகி உள்ளது. நீலகிரியில் மொத்தம் 356.1 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்கிறது. இது சராசரியாக 20.94 ஆகும். ஊட்டி வேலிவியூ பகுதியில் பனிமூட்டம் காணப்பட்டதால், வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிர விட்டபடி சென்றன. 

Next Story