மாதனூர் அருகே, மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி


மாதனூர் அருகே, மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி
x
தினத்தந்தி 31 Oct 2019 4:15 AM IST (Updated: 31 Oct 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

மாதனூர் அருகே மர்மகாய்ச்சலுக்கு சிறுவன் பலியானான். அவனது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக்கோரி கொட்டும் மழையில் உறவினர்கள், பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அணைக்கட்டு, 

ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியத்துக்குட்பட்ட அகரம் கிராமத்தை சேர்ந்தவர் அருள். கூலித்தொழிலாளி. இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு 3 குழந்தைகள். இதில் 2-வது மகன் ஹரீஷ் (வயது 6), அகரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 29-ந் தேதி ஹரீசுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவனை பெற்றோர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு ஹரீஷ் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்துவிட்டான். இந்த தகவல் அறிந்ததும் ஆம்பூர் தாசில்தார் ரமேஷ் சம்பவ இடத்திற்கு சென்று ஹரீசின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடத்தில் விசாரணை நடத்தினார்.

அப்போது அவர்கள், “எங்கள் பகுதியில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆகையால்தான் ஹரீஷ் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலியானான்” என்றனர்.

இதனிடையே ஹரீசின் உடல் அகரம் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது அவனது சாவுக்கு டாக்டர்களே காரணம், எனவே குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக்கூறி ஒடுகத்தூர்-ஆம்பூர் சாலையில் பொதுமக்களும் உறவினர்களும் மறியலில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் பலத்த மழை பெய்தது. ஆனால் கொட்டும் மழையில் நனைந்தவாறு அவர்கள் மறியலை தொடர்ந்தனர். அவர்களுடன் தாசில்தார் ரமேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் நிவாரணத் தொகை வழங்குவது குறித்து பேச முன்வரவில்லை என்று கூறி தாசில்தாரை அவர்கள் முற்றுகையிட்டு கோஷமிட்டனர். மறியல் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் நிவாரணம் வழங்குவதாக தாசில்தார் தெரிவித்தால் மறியலை கைவிடுகிறோம் என்று கூறினார்கள். அதற்கு தாசில்தார் ரமேஷ், உங்கள் கோரிக்கை குறித்து மனு கொடுங்கள். கலெக்டரின் பார்வைக்கு கொண்டு செல்கிறேன் என்று கூறினார். இதில் சமரசம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதன்பின் தாசில்தார் ரமேஷ், மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வினாயகத்தை தொடர்பு கொண்டு அகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்றவும் கொசு மருந்து அடிக்கவும் உத்தரவிட்டார்.

Next Story