தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார்


தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார்
x
தினத்தந்தி 30 Oct 2019 11:00 PM GMT (Updated: 30 Oct 2019 10:23 PM GMT)

தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் நேற்று பெய்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. தூத்துக்குடி பழைய பஸ்நிலையத்தில் தண்ணீர் தேங்காத வகையில் மண் நிரப்பப்பட்டு இருந்தது. ஆனாலும் அங்கு தண்ணீர் தேங்கி கிடந்தது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேற்று மதியம் பழைய பஸ் நிலையத்துக்கு சென்று பார்வையிட்டார். மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தண்ணீரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து வெற்றிவேல்நகர் உள்ளிட்ட மழைநீர் தேங்கிய பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். அங்கு மழைநீர் அப்புறப்படுத்தும் பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தினார்.

அப்போது வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ, பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

என்னுடைய தொகுதியில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை போடும் வாய்ப்பு கிடைத்தமைக்கு பெருமைப்படுகிறேன். நாடு முழுவதும் சிறுவன் சுஜித் காப்பாற்றப்பட வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. மீட்பு பணியில் இருந்தவர்களும், குழந்தையை மீட்க போராடினார்கள். நீதிபதிகள் ஒவ்வொரு முறையும் ஒரு மரணம் தான், நம் கடமையை செய்வதற்கு விழிப்புணர்வாக இருக்க வேண்டுமா என்று கேட்டு உள்ளனர். அதனை புரிந்து கொண்டு நாம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

ஆகையால் அதிகாரிகள் வந்து சொல்வதற்கு முன்னர் நாமே முன்வந்து ஆழ்துளை கிணறுகளை மூடி வைக்க வேண்டும். இது போன்று உயிரோடு விளையாடாமல் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பாக வைத்திட வேண்டும். இனி இப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிக்கும் அமைப்பாக மாற்ற உள்ளதாக அரசு அறிவித்து உள்ளது. அதனை அறிவிப்போடு நிறுத்தி கொள்ளாமல் உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story