ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் - கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தல்


ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் - கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 31 Oct 2019 4:15 AM IST (Updated: 31 Oct 2019 3:53 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்கான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி, 


தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைப்பவர்கள் அதற்கான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் குழாய் கிணறுகள் தோண்டுவதற்கு முன்பு நிலத்தின் உரிமையாளர் கிராமப்பகுதி எனில் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் (கிராம ஊராட்சிகள்), பேரூராட்சி எனில் நிர்வாக அலுவலரிடமும், நகராட்சி பகுதி எனில் நகராட்சி ஆணையரிடமும், மாநகராட்சி பகுதி எனில் மாநகராட்சி ஆணையரிடமும் 15 நாட்களுக்கு முன்பு எழுத்து மூலமாக முன் அனுமதி பெற வேண்டும்.

முன் அனுமதி பெற்ற பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் பதிவு செய்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ள ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் நிறுவனத்தின் மூலமே ஆழ்துளைக் கிணறுகள் அமைக்்கப்பட வேண்டும். ஆழ்துளைக் கிணறு தோண்டும் போது, அதன் அருகில் ஆழ்துளை நிறுவனங்களின் முழு முகவரி மற்றும் நில உரிமையாளர் பெயர் முகவரிகளுடன் கூடிய அறிவிப்புப் பலகை வைக்கப்பட வேண்டும். கிணறு தோண்டும்போது அதனை சுற்றி முள்வேலி அல்லது உரிய தடுப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். கிணறுகளின் மேற்புறத்தை இரும்புத் தகடு வைத்து மின் பற்றவைப்பு செய்ய வேண்டும் அல்லது வலிமையான மூடியை பொருத்த வேண்டும். இந்த நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் நில உரிமையாளர்கள் மீதும், ஆழ்துளைக் கிணறு துளையிடும் வாகன உரிமையாளர் மீதும் போலீஸ் மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆழ்துளைக் கிணறு அமைத்தபின், கிணற்றை சுற்றி 0.50-க்கு 0.60 மீட்டர் அளவில் சிமெண்ட் கான்கிரிட் நடைமேடை பூமிக்கு மேலாக 0.30 மீட்டர் உயரத்தில் பூமிக்கு கீழாக 0.30 மீட்டர் அளவில் ஏற்படுத்தப்பட வேண்டும். உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நெறிமுறைகளை பின்பற்றாமல் ஆழ்துளைக் கிணறு அமைத்தால், ஆழ்துளை தோண்டும் வாகனம் மற்றும் கருவிகள் வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித் துறையினரால் கைப்பற்றப்படும். நெறிமுறைகளை பின்பற்றாமல் ஆழ்துளைக் கிணறு அமைப்பவர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து பொது மக்கள் 1077 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

மேலும் கைவிடப்பட்ட, பாதுகாப்பற்ற நிலையில் அபாயகரமாக உள்ள ஆழ்துளை மற்றும் குழாய்க்் கிணறுகளையும் பொதுமக்கள் கண்டறிந்தால் அதனை பற்றிய விவரத்தையும் 1077-க்கு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story