பெண்ணாடம் அருகே, வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது - போக்குவரத்து துண்டிப்பால் பொதுமக்கள் அவதி


பெண்ணாடம் அருகே, வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது - போக்குவரத்து துண்டிப்பால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 31 Oct 2019 3:15 AM IST (Updated: 31 Oct 2019 4:17 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணாடம் அருகே வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

பெண்ணாடம், 

பெண்ணாடம் அருகே சவுந்திரசோழபுரம்- கோட்டைக்காடு இடையே வெள்ளாறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே கடலூர்-அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் மண்ணால் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்த தரைப்பாலம் வழியாகத்தான், பெண்ணாடம், சவுந்திரசோழபுரம், செம்பேரி, திருமலை அகரம், மாளிகை கோட்டம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் ஜெயங்கொண்டம், அரியலூர் போன்ற பகுதிகளுக்கு சென்று வந்தனர். அதுபோல் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கோட்டைக்காடு, ஆலத்தியூர், ஆதனகுறிச்சி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள் இந்த தரைப்பாலம் வழியாக கடலூர் மாவட்டத்துக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெண்ணாடம், அரியலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆனைவாரி, உப்பு ஓடையில் இருந்து வந்த தண்ணீரும், அப்பகுதியில் வாய்க்கால் மற்றும் வயல் வெளிபகுதியில் இருந்து வந்த தண்ணீரும் வெள்ளாற்றில் கலந்ததால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக சவுந்திரசோழபுரம் -கோட்டைக்காடு இடையே மண்ணால் அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் நேற்று காலையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இதனால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக கடலூர், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள், முருகன்குறிச்சி வழியாக சுமார் 15 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில், ஏற்கனவே தரைப்பாலம் உள்ளது. இதையடுத்து தரைப்பாலத்தின் அருகில் கோட்டைக்காடு-சவுந்திரசோழபுரம் இடையே வெள்ளாற்றின் குறுக்கே ரூ.12½ கோடியில் மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக இரு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் சென்று வருவதற்கு ஏதுவாக சிறிது தூரம் இடைவெளி விட்டு தற்காலிகமாக மண்ணால் மற்றொரு தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்த தரைப்பாலத்தை தான் நாங்கள் பயன்படுத்தி வந்தோம். கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்காலிக தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டு விட்டது என்றனர். 

Next Story