நெல்லை முன்னாள் பெண் மேயர் கொலை வழக்கு: தி.மு.க. பிரமுகர் சீனியம்மாள் கணவருடன் கைது


நெல்லை முன்னாள் பெண் மேயர் கொலை வழக்கு: தி.மு.க. பிரமுகர் சீனியம்மாள் கணவருடன் கைது
x
தினத்தந்தி 31 Oct 2019 12:00 AM GMT (Updated: 30 Oct 2019 11:41 PM GMT)

நெல்லை முன்னாள் பெண் மேயர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தி.மு.க. பிரமுகரான சீனியம்மாள் தனது கணவருடன் நேற்று கைது செய்யப்பட்டார்.

நெல்லை, 

நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இருந்தவர் உமா மகேசுவரி (வயது 62). இவர் தி.மு.க.வை சேர்ந்தவர். இவருடைய கணவர் முருகசங்கரன் (72). இவர்களின் வீடு பாளையங்கோட்டை அரசு என்ஜினீயரிங் கல்லூரி எதிரே ரோஸ்நகரில் உள்ளது. உமா மகேசுவரியின் வீட்டில் மேலப்பாளையம் ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்த மாரி (37) என்பவர் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி மாரி வேலைக்காக உமா மகேசுவரி வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு உமா மகேசுவரி, முருகசங்கரன் ஆகியோர் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டு வீட்டில் இருந்து வெளியே ஓடி வர முயன்றார். அப்போது, வீட்டில் மறைந்து இருந்த மர்ம நபர் மாரியையும் கொலை செய்தார். உமாமகேசுவரி அணிந்து இருந்த நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. இதனால் நகைக்காக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று கருதப்பட்டது. இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.

இந்த கொலையில் தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் (34) என்பவர் ஈடுபட்டது தெரியவந்தது. பாளையங்கோட்டை சாந்திநகரில் உள்ள தனது வீட்டில் பதுங்கி இருந்த கார்த்திகேயனை கடந்த ஜூலை மாதம் 29-ந் தேதி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நகைகள், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

உமா மகேசுவரியிடம் தேர்தலில் சீட் வாங்கி தருமாறு கூறி சீனியம்மாள் பணம் கொடுத்து இருந்தார். ஆனால் அவர் சொன்னபடி சீட் வாங்கிக் கொடுக்கவில்லை. மேலும் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன் கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி உமாமகேசுவரியின் வீட்டிற்கு சென்று பேசியுள்ளார். அப்போது, ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன் கத்தியால் உமாமகேசுவரி, முருகசங்கரன் ஆகியோரை கொடூரமாக குத்திக்கொலை செய்தார். அப்போது, வீட்டிற்கு வந்த பணிப்பெண் மாரியையும் அவர் கொலை செய்தது தெரியவந்தது.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு விஜயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு அணில்குமாரிடம் கொலை வழக்கு குறித்த ஆவணங்களை மேலப்பாளையம் போலீசார் ஒப்படைத்தனர். அவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த கார்த்திகேயனை காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அப்போது, பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. அதாவது, கடந்த 2009-ம் ஆண்டு பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பெட்டிக்கடையை கார்த்திகேயன், அவரது தந்தை சன்னாசி ஆகியோர் சேர்ந்து தீவைத்து கொளுத்தி உள்ளார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் 2 பேரையும் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

அப்போது, அவர்களுக்கு அங்கு இருந்த கூலிப்படையைச் சேர்ந்த ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் விடுதலையாகி வெளியே வந்தனர். தொடர்ந்து கூலிப்படையைச் சேர்ந்தவரை அழைத்து சீனியம்மாள், சன்னாசி, கார்த்திகேயன் ஆகியோர் பேசியுள்ளனர். அப்போது, உமாமகேசுவரி உயிருடன் இருந்தால் தேர்தலில் நிற்க வாய்ப்பு கிடைக்காது. எனவே, அவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டியதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவலின் பேரில், மதுரை கரிசல்குளத்தில் உள்ள சீனியம்மாள் வீட்டிற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று காலை சென்றனர். அங்கு இருந்த சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் பாளையங்கோட்டையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு மதியம் அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் கொடுக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் கொலைக்கான முழு காரணம் தெரியவரும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

நெல்லை முன்னாள் பெண் மேயர் உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தி.மு.க. பிரமுகர் சீனியம்மாள் தனது கணவருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story