அரசு அலுவலகங்களில், ‘பிரீபெய்டு’ மீட்டர் வைக்க பரிசீலனை - அமைச்சர் தங்கமணி பேட்டி
அரசு அலுவலகங்களில் ‘பிரீபெய்டு’ மீட்டர் வைப்பது அரசின் பரிசீலனையில் இருந்து வருவதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல்,
தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்புவிழா நேற்று நாமக்கல்லில் நடந்தது. இவ்விழாவில் கலந்துகொண்ட தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் தற்போது மழை பெய்து வருவதால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட கலெக்டர்களிடம் தகுந்த முன்னேற்பாடுகள் செய்ய உத்தரவிட்டுள்ளார். எந்த புயல் வந்தாலும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் மின்சாரத்தை பொறுத்தவரை எந்த பகுதியில் பாதிக்கப்படுகிறதோ அங்கு சீரமைக்க தேவையான உபகரணங்கள் உள்ளன. ஊட்டி பகுதியில் கனமழை பெய்யும் பட்சத்தில் மின்வாரியம் சார்பில் தகுந்த முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பொதுமக்கள் மின்வயர் துண்டிக்கப்பட்டால், அதுகுறித்து உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மழை பெய்து வருவதால் பொதுமக்கள் நேரடியாக சென்று மின்கம்பத்தில் ஏறி ‘பீஸ்’ போடுவது போன்ற பணிகளை தவிர்க்க வேண்டும். 24 மணி நேரமும் மின்சார வாரிய அலுவலகங்களில் அலுவலர்கள் இருக்கின்றனர். அவர்களிடம் தகவல் தெரிவிக்கலாம். அரசு அலுவலகம் மற்றும் அரசு குடியிருப்புகளில் ‘பிரீபெய்டு’ மீட்டர் வைப்பது அரசின் பரிசீலனையில் உள்ளது.
முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து சசிகலா, டி.டி.வி.தினகரன் தவிர யார் வந்தாலும் அ.தி.மு.க.வில் சேரலாம் என ஏற்கனவே தெரிவித்து உள்ளனர். அதே நிலைபாடு தான் தற்போதும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story