மாவட்ட செய்திகள்

கேப்டவுன் ஆகிறதா, சென்னை? + "||" + Is chennai is becoming capetown?

கேப்டவுன் ஆகிறதா, சென்னை?

கேப்டவுன் ஆகிறதா, சென்னை?
தண்ணீர்... தண்ணீர்... - இது மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர் இயக்கத்தில் 1981-ம் ஆண்டு வெளிவந்து தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திரைப் படம் மட்டுமல்ல.
தண்ணீர்... தண்ணீர்... என நாம் கதறுகிற நிலை வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று சொல்லுகிற நிலையும் கூட.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வெளுத்துக்கட்டிக்கொண்டிருக்கிறதே; இப்போது போய் இப்படி குண்டை தூக்கி போடுகிறீர்களே என கேட்கத்தோன்றுகிறதா?

பருவ மழை வெளுத்துக்கட்டினாலும், மழை சேகரிப்பு கட்டமைப்பில் நாம் மிக மிக பின்தங்கி இருக்கிறோம், இயற்கை மழையை வாரி வாரி வழங்கினாலும்கூட, அதை முறையாக நாம் சேமிக்கிற வழக்கம் இங்கே இல்லை.

நமது நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக 1,068 மி.மீ. மழை பெய்கிறது. இதன் மூலம் 400 கோடி கன மீட்டர் தண்ணீர் கிடைக்கத்தான் செய்கிறது. ஆனாலும் தண்ணீர் பற்றாக்குறைதான். காரணம் என்ன, யோசித்தது உண்டா?

ஏரிகள், குளங்கள், ஆறுகள், இன்ன பிற நீர் நிலைகள் அத்தனையும் ஆக்கிரமிப்பு.. தண்ணீர் இருந்த இடமெல்லாம் கான்கிரீட் காடுகளாகி இருக்கின்றன. மழை நீரை சேமிக்க உள்கட்டமைப்பு வசதிகள் பற்றாக்குறை. தண்ணீரை பயன்படுத்துவதில் சிக்கனமில்லை. பொது இடங்களில் தண்ணீரை திறந்து விட்டு வீணாக்குவதில் நம்மை மிஞ்சுவதற்கு ஆளில்லை.

இன்னொரு புறமோ, ஓட்டு வங்கி அரசியலில் கட்சிகள், மக்களை இலவச திட்டங்களால் கவர நினைக்கின்றனவே தவிர, இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அக்கறை இல்லை என்பதுதான் சோகம்.

இந்த தருணத்தில் டெல்லியில் நேற்று நடந்த 13-வது உலக தண்ணீர் மாநாட்டில் பேசிய மத்திய ஜலசக்தி (நீர்வளம்) மந்திரி கஜேந்திர சிங் செகாவத் கூறிய வார்த்தைகள், கன்னத்தில் ‘பொளேர்’ என அறைவது போல் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

அப்படி என்னதான் அவர் சொல்லி விட்டார் என்கிறீர்களா?

“தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பதை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாவிட்டால், சென்னையும், பெங்களூருவும் கேப்டவுன் ஆகும். அது மட்டுமல்ல... பெரும்பாலான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட போகிறார்கள்”.

- இதுதான் மந்திரி கஜேந்திர சிங் செகாவத் சொன்னது.

அதென்ன சென்னை, கேப்டவுன் ஆகும் என்று மந்திரி சொல்லி இருக்கிறாரே என்றால் நீங்கள் கேப்டவுனைப் பற்றி தெரிந்து கொண்டாக வேண்டும்.

தென் ஆப்பிரிக்க நாட்டின் தலைநகரம்தான் இந்த கேப்டவுன். ஏறத்தாழ 40 லட்சம் பேர் வசிக்கிற நகரம் அது.

கடந்த ஆண்டு இந்த நகரத்தில் தண்ணீர் இல்லாமல் போகும் நிலை உருவானது. அப்போது அந்த நகர மக்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டதுதான் ‘டே ஜீரோ’.

சொட்டு தண்ணீர் கூட இல்லாத நிலைக்கு கேப்டவுன் சென்று கொண்டிருக்கிறது என்பதை மக்களுக்கு உரக்க சொல்லி தண்ணீர் பயன்பாட்டில் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து அமல்படுத்தியது, அந்த நாட்டு அரசு.

‘டே ஜீரோ’ வரும்போது குழாயில் தண்ணீர் வராது என அறிவித்தது. தண்ணீர் பெறும் மையங்களைத்தான் மக்கள் நாட வேண்டும் என்று கூறப்பட்டது.

தண்ணீர் சிக்கனம்... தண்ணீர் சேமிப்பு... இரண்டும் இரு கண்களாக ஆனது கேப் டவுனில்.

குறைந்த தண்ணீரில் குளிப்பது எப்படி? உடைகளை சலவை செய்வது எப்படி? என்பது போன்ற போட்டிகள் வைத்தார்கள். குறைவான தண்ணீரை பயன்படுத்த மக்களுக்கு யோசனைகள்... போட்டிகள்... கழிவறையில் தண்ணீரை எப்படி மிக சிக்கனமாக பயன்படுத்தலாம் என கற்றுத்தந்தனர். அரசாங்கம் சொன்னதை மக்கள் செய்தார்கள். அதனால்தான் ‘டே ஜீரோ’ என்ற ஆபத்தில் இருந்து அந்த நகரம் இன்று வரை தப்பி வருகிறது.

கேப்டவுன் சொட்டு தண்ணீர் கூட இல்லாத நிலைக்கு சென்று கொண்டிருந்தது போலத்தான், இப்போது சென்னையும், பெங்களூருவும் சென்று கொண்டிருக்கின்றன என்பதுதான் மந்திரி கஜேந்திர சிங் செகாவத் சொன்ன எச்சரிக்கை.

விரைவான நகரமயமாக்கம், மக்கள் தொகை பெருக்கம், பிற இடங்களில் இருந்து மக்கள் வரவு, மோசமான நீர் மேலாண்மை, நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் கீழே சென்று கொண்டிருக்கும் நிலை எல்லாமும் சேர்ந்துதான் ‘டே ஜீரோ’வை நோக்கி சென்னையையும், பெங்களூருவையும் அழைத்து சென்று கொண்டிருக்கின்றன.

“இந்தியாவிலே மக்கள் நதிகளை வணங்குகிறார்கள், ஆனால் அவை மிகவும் அசுத்தமான நீர் வளங்களைத்தான் கொண்டுள்ளன” என்ற ஆதங்கத்தையும் மந்திரி கஜேந்திர சிங் செகாவத் வெளிப்படுத்தி இருக்கிறார். நீர் நிலைகளில் இருக்கிற தண்ணீரையும் அசுத்தப்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

இந்தியாவில் ஆண்டுக்கு 1,068 மில்லி மீட்டர் மழை பெய்கிறபோது, இஸ்ரேலில் ஆண்டுக்கு 100 மில்லி மீட்டர் மழைதான். ஆனால் அங்கே தண்ணீர் ஏராளமாக இருக்கிறது. ஏற்றுமதி செய்கிறது என்ற தகவலையும் தருகிறார் மந்திரி கஜேந்திரசிங் செகாவத்.

முத்தாய்ப்பாய் அவர் சொன்னதையும் இங்கே பதிவு செய்வது பொருத்தம்.

“இந்தியாவில் மக்கள் உரிமைகளைப் பற்றி அதிகமாக பேசுகிறார்கள். ஆனால் தங்கள் பொறுப்பு பற்றி குறைவாகவே பேசுகிறார்கள்... இயற்கை வளங்களின் காப்பாளர்களாக மனிதர்கள் மாறுகிறபோது எல்லாமே சரியாகும். ஆனால் இயற்கை வளங்களின் உரிமையாளர்களாக நாம் மாறுகிறபோதோ பிரச்சினைகள்தான் பெருகும்”. இது சத்தியமான வார்த்தைகள்.

தண்ணீர் சிக்கனமும், தண்ணீர் சேமிப்பும் சென்னைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பொருந்தும்.

தண்ணீர்... தண்ணீர்... என கதறுகிற நிலை வராமல் காக்க வேண்டுமானால், கேப்டவுனை பார்த்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள் மக்களே...

இதையும் நாம் செய்யாவிட்டால், கண் எதிரே ‘டே ஜீரோ’! வேறென்ன சொல்ல?

தொடர்புடைய செய்திகள்

1. 2019-ம் ஆண்டில் சென்னையில் குற்றங்கள் குறைந்துள்ளது - போலீஸ் கமிஷனர் பேட்டி
2019-ம் ஆண்டில் சென்னை நகரில் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளதாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.
2. சென்னையில் பெட்ரோல் விலை 7 காசுகள் குறைந்தது
சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் குறைந்துள்ளது.