ஆரணி அருகே, மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
ஆரணி அருகே மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆரணி,
ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் சித்தேரி ஊராட்சிக்குட்பட்ட துந்தரீகம்பட்டு கிராமத்தில் டேங்க் தெருவிலும், சீனிவாசன் தெருவிலும் ஒன்றியத்தின் சார்பில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. வறட்சியின்போது நீர்மட்டம் இல்லாததால் ஆழ்துளை கிணற்றின் மோட்டாரை கழற்றி எடுத்து சென்று விட்டனர். ஆனால் ஆழ்துளை கிணற்றை மூடவில்லை.
இந்த நிலையில் தற்போது அந்த 2 இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பதாக கூறி பெரிய பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் இந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது.
இங்கு குழந்தைகள் அதிகம் இருப்பதால் உடனடியாக இந்த பள்ளத்தை மூட பொதுமக்கள் ஆரணி ஊராட்சி ஒன்றியத்திலும், ஊராட்சி செயலாளரிடமும் தகவல் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மோசவாடி கிராமத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணி நடந்தது. டாக்டர் சீனிவாசன் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் அன்பரசன், சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் புகைமருந்து அடித்தல், குளோரின் தெளித்தல், கால்வாய்கள் தூர்வாருதல், சாலையில் தேங்கியிருந்த தண்ணீர் அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் நடந்தன.
இந்த பணிகள் முடித்துவிட்டு பெரணமல்லூர் செல்லும் சாலையில் பக்த அனுமான் கோவில் அருகே 2 பயனற்ற ஆழ்துளை கிணறுகள் திறந்து கிடந்தது. இதை கண்ட மருத்துவ குழுவினர் பிளாஸ்டிக் மூடியை வாங்கி வந்து 2 ஆழ்துளை கிணறுகளை மூடினர்.
Related Tags :
Next Story