ஈரோட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.40 லட்சம் மோசடி - கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது
ஈரோட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக கணவன்-மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு நாடார்மேடு தீரன் சின்னமலை வீதியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு. இவருடைய மனைவி பாலபார்கவி (வயது 30). இவருடன் அதே பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் கடந்த மாதம் 22-ந் தேதி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “எங்கள் பகுதியை சேர்ந்த சரவணன் (40), அவருடைய மனைவி சங்கீதா (37), சரவணனின் தம்பி ரமேஷ் (39) ஆகியோர் அரிசிக்கடை வைத்து உள்ளனர். இவர்கள் கடந்த 7 ஆண்டுகளாக ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலான ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இதில், எங்களுடன் சேர்த்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பணத்தை தவணை முறையில் செலுத்தினார்கள்.
ஏலத்தில் சீட்டு எடுப்பவர்களுக்கு பணத்தை உடனடியாக தராமல் வட்டியுடன் பின்னர் தருவதாக அவர்கள் கூறினர். ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்காமல் ரூ.40 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்துவிட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், சூரம்பட்டி போலீசாரிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், சரவணன், சங்கீதா, ரமேஷ் ஆகியோர் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததும், பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
Related Tags :
Next Story