மாவட்ட செய்திகள்

பர்கூர் மலைப்பகுதியில் விடிய விடிய பலத்த மழை: எண்ணமங்கலம் ஏரி நிரம்பியது; வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் + "||" + Heavy rain in the Burgur Mountains The Anamangalam lake is full Surface water discharge from Varaduppallam Dam

பர்கூர் மலைப்பகுதியில் விடிய விடிய பலத்த மழை: எண்ணமங்கலம் ஏரி நிரம்பியது; வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்

பர்கூர் மலைப்பகுதியில் விடிய விடிய பலத்த மழை: எண்ணமங்கலம் ஏரி நிரம்பியது; வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்
பர்கூர் மலைப்பகுதியில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் எண்ணமங்கலம் ஏரி நிரம்பியது. வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து அதிக அளவு உபரிநீர் வெளியேறி வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அந்தியூர்,

ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை கொட்டி வருகிறது. அதன்படி அந்தியூர், பர்கூர் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதேபோல் நேற்று முன்தினம் மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பர்கூர் மலைப்பகுதியில் விடிய விடிய பலத்த மழை கொட்டியது.

இதனால் தாமரைகரையில் இருந்து தேவர்மலை செல்லும் சாலையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் பர்கூர் மலைப்பகுதியில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நேற்று அதிகாலை 3 மணி வரை கொட்டி தீர்த்தது.

இதனால் முழு கொள்ளளவை ஏற்கனவே எட்டிய அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து வினாடிக்கு 124 கனஅடி தண்ணீர், உபரிநீராக வெளியேறுகிறது.

தொடர்ந்து மழை பெய்தால் அணையில் இருந்து அதிக அளவு உபரிநீர் வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அந்தியூர் தாசில்தார் மாலதி உத்தரவின்பேரில் உபரிநீர் வெளியேறும் கரையில் உள்ள செல்லம்பாளையம், சங்கராப்பாளையம், வட்டக்காடு ஆகிய பகுதி மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் அணை பகுதியில் வருவாய்த்துறை பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபற்றி அறிந்ததும் இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை அதிகாரி முகமது சுலைமான், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறை அதிகாரிகள் அணைக்கு சென்று உபரிநீர் வெளியேறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உபரிநீரானது கெட்டிசமுத்திரம் ஏரி, பெரியஏரியில் சென்று கலக்கிறது. நீர்வரத்து அதிகரிப்பு, தொடர் மழையால் வறண்டு கிடந்த 17 அடி உயரமுள்ள கெட்டிசமுத்திரம் ஏரி 8 அடி உயர்ந்துள்ளது.

மேலும் வழுக்குப்பாறை என்ற இடத்தில் பெய்த மழையால் எண்ணமங்கலம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 10 அடி உயரமுள்ள ஏரி கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளது. மேலும் இந்த ஏரியில் இருந்து உபரிநீர் ராசாங்குளம் ஏரி, பூனாச்சி பள்ளம், சித்தார் வழியாக காவிரி ஆற்றில் சென்று கலக்கிறது.

இதேபோல் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நேற்று முன்தினம் மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரத்து 282 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 1,800 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இது இரவு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனால் அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் அணை முன்பு நின்று செல்பி எடுக்கவோ மற்றும் அணையில் துணி துவைக்கவோ, பரிசல் இயக்கவோ பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர். அணை முன்பு எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

வரட்டுப்பள்ளம் - 50.6

கவுந்தப்பாடி - 40

கோபிசெட்டிபாளையம்- 36

மொடக்குறிச்சி - 25

குண்டேரிப்பள்ளம் - 19.4

ஈரோடு - 17

பவானி - 9

பெருந்துறை - 8.5

பவானிசாகர் - 6.2

எலந்தகுட்டைமேடு - 6.2

நம்பியூர் - 5

அம்மாபேட்டை - 4.4

கொடிவேரி - 4.2

சென்னிமலை - 4

சத்தியமங்கலம் - 3

தாளவாடி - 2

தொடர்புடைய செய்திகள்

1. நாசிக்கில் பலத்த மழை: அமித்ஷா ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியது
நாசிக்கில் பலத்த மழை காரணமாக, அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியது.
2. தூத்துக்குடியில் பலத்த மழை உப்பாற்று ஓடையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது
தூத்துக்குடியில் பெய்த பலத்த மழை காரணமாக உப்பாற்று ஓடையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. எட்டயபுரம் தெப்பக்குளம் நிரம்பியது.
3. உத்தரபிரதேசத்தில் பலத்த மழை: ஜெயிலுக்குள் வெள்ளம் புகுந்தது - 900 கைதிகள் வெளியேற்றம்
உத்தரபிரதேசத்தில் பெய்த பலத்த மழையை தொடர்ந்து, ஜெயிலுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கிருந்த 900 கைதிகள் வேறு ஜெயில்களுக்கு மாற்றப்பட்டனர்.
4. கிருஷ்ணராயபுரம் பகுதியில் பலத்த மழை: அறுந்து கிடந்த மின்கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து விவசாயி சாவு
கிருஷ்ணராயபுரம் பகுதியில் பலத்த மழையால் அறுந்து கிடந்த மின்கம்பி உரசியதில் விவசாயி மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார்.
5. மும்பையில் பலத்த மழை, கடல் சீற்றம்; கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
மும்பையில் பலத்த மழை காரணமாக கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் கடற்கரைக்கு மக்கள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.