கூலி தொழிலாளி கொலை வழக்கில் அண்ணன், தம்பிக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை கோர்ட்டு தீர்ப்பு


கூலி தொழிலாளி கொலை வழக்கில் அண்ணன், தம்பிக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 31 Oct 2019 10:45 PM GMT (Updated: 31 Oct 2019 5:27 PM GMT)

அரக்கோணம் அருகே கூலி தொழிலாளியை அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில் அண்ணன், தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து ராணிப்பேட்டை கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

சிப்காட்(ராணிப்பேட்டை),

அரக்கோணம் தாலுகா, தக்கோலம் போலீஸ் நிலைய பகுதிக்குட்பட்டது பரமேஸ்வரமங்கலம். இந்த பகுதியை சேர்ந்தவர் பாலா என்ற பாலகிருஷ்ணன் (வயது 25), கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் சங்கர் என்ற சங்கரமூர்த்தி (32) ஆட்டோ டிரைவர். பாலாவுக்கும், சங்கருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 24-ந் தேதி பரமேஸ்வரமங்கலத்தில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு மாவு அரைப்பதற்காக பரமேஸ்வரமங்கலத்தில் உள்ள மாவுமில் ஒன்றிற்கு பாலா சென்றார். அப்போது முன்விரோதம் காரணமாக பாலாவுக்கும், சங்கருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறில் சங்கர் இரும்பு கம்பியால் பாலாவை தாக்கியுள்ளார். இதையடுத்து சங்கருடன் இருந்த அவரது சகோதரரும் ஆட்டோ டிரைவரான விநாயகம் என்ற விநாயமூர்த்தி (41) தான் வைத்திருந்த அரிவாளால் பாலாவை வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த பாலா அரக்கோணம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தக்கோலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரையும், விநாயகத்தையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதுகுறித்த வழக்கு ராணிப்பேட்டை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று 2-வது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி சீனிவாசன், கூலித்தொழிலாளி பாலாவை கொலை செய்த வழக்கில் சங்கர், விநாயகம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் 6 மாத சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் ரவிக்குமார் வாதாடினார்.

ஆயுள் தண்டனை தீர்ப்பு அளித்தவுடன் சங்கரும், விநாயகமும் கதறி அழுதனர். பின்னர் அவர்களை பலத்த காவலுடன் போலீசார் சிறைக்கு அழைத்து சென்றனர்.

Next Story