மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு: கார் டிரைவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை + "||" + Communication with restricted movement At the car driver's house NIA Officers Action Check

தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு: கார் டிரைவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை

தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு: கார் டிரைவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை
காயல்பட்டினத்தில் கார் டிரைவரின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த செல்போன் மற்றும் ஆவணங்களை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
ஆறுமுகநேரி, 

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படுதல், பயங்கரவாத கருத்துகளை பரப்புதல், பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடுதல் போன்றவற்றை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கண்காணித்து, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்து வருகின்றனர். அதன்படி, தமிழகத்தில் கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களை தேசிய புலனாய்வு முகமையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கே.டி.எம். தெருவைச் சேர்ந்த ரிபாய்தீன் மகனான வாடகை கார் டிரைவர் அபுல்ஹசன் சாதுலி (வயது 27) என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று காலை 6 மணி அளவில் அதிரடி சோதனை நடத்தினர். மதுரையில் இருந்து வந்த தேசிய புலனாய்வு முகமை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இதையொட்டி அந்த வீட்டின் முன்பு ஆறுமுகநேரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சோதனை நடைபெற்றபோது அபுல்ஹசன் சாதுலி வீட்டில் இல்லை. அவர் தனது காரில் பயணிகளை ஏற்றி கொண்டு, சென்னைக்கு சென்று இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது இணைப்பு கிடைக்கவில்லை. இதுகுறித்து தேசிய புலனாய்வு முகாமையினர் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். தொடர்ந்து அபுல்ஹசன் சாதுலியை தேடும் பணியை அதிகாரிகள் முடுக்கி விட்டனர்.

அபுல்ஹசன் சாதுலியின் தந்தை ரிபாய்தீனின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் ஆகும். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தினருடன் காயல்பட்டினத்துக்கு வந்தார். ரிபாய்தீன் பள்ளிவாசலில் ஓதும் வேலை செய்து வந்தார். அவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார்.

அபுல்ஹசன் சாதுலிக்கு 2 அண்ணன்கள் உள்ளனர். மூத்த அண்ணன் ஷேக் முகம்மது வெளிநாட்டில் வேலை செய்து விட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். 2-வது அண்ணன் காயல்பட்டினத்தில் உள்ள வீட்டில் முதியவரை பராமரிக்கும் வேலை செய்து வருகிறார்.

அண்ணன்-தம்பிகள் 3 பேருக்கும் திருமணமாகவில்லை. இவர்களுடன் தாயார் வசித்து வருகிறார்.

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, வீட்டில் இருந்த அபுல்ஹசன் சாதுலியின் தாயாரிடமும், மூத்த அண்ணன் ஷேக் முகம்மதுவிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அங்கிருந்த 9 ஆவணங்கள், ஒரு செல்போன் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். காலை 10 மணி அளவில் சோதனையை நிறைவு செய்து விட்டு, அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.

அபுல்ஹசன் சாதுலி அவ்வப்போது ‘வாட்ஸ்-அப்’ உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அவதூறாக கருத்துகளை பதிவிட்டு வந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர். காயல்பட்டினத்தில் கார் டிரைவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.