நெல்லை முன்னாள் மேயர் கொலையில் கைதான தி.மு.க. பெண் பிரமுகர் - கணவர் சிறையில் அடைப்பு
நெல்லை முன்னாள் பெண் மேயர் கொலையில் கைதான தி.மு.க. பெண் பிரமுகரும், அவருடைய கணவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நெல்லை,
நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இருந்தவர் உமா மகேசுவரி (வயது 62). தி.மு.க.வை சேர்ந்த இவருடைய கணவர் முருகசங்கரன் (72). இவர்களின் வீடு பாளையங்கோட்டை அரசு என்ஜினீயரிங் கல்லூரி எதிரே ரோஸ்நகரில் உள்ளது. உமா மகேசுவரியின் வீட்டில் மேலப்பாளையம் ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்த மாரி (37) என்பவர் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி வீட்டில் இருந்த உமா மகேசுவரி, அவருடைய கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரி ஆகிய 3 பேரும் கொடூரமாக குத்திக்கொலை செய்யப்பட்டனர். நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த 3 பேர் கொலை குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் இந்த கொலைகள் தொடர்பாக தி.மு.க. பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் என்ற கார்த்திராஜை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார், இன்ஸ்பெக்டர்கள் பிறைச்சந்திரன், உலகராணி, சூடாமணி ஆகியோர் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
அதாவது, ஒரு வழக்கில் கைதாகி சிறைக்கு சென்ற சீனியம்மாளின் கணவர் தன்னாசி, அவரது மகன் கார்த்திகேயன் ஆகியோருக்கும், சிறையில் இருந்த கூலிப்படையை சேர்ந்த ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, உமாமகேசுவரி இருக்கும் வரை எங்களுக்கு அரசியலில் முக்கியத்துவம் கிடைக்காது. எனவே, அவரை கொலை செய்ய வேண்டும் என்று கூலிப்படையை சேர்ந்தவரிடம் கூறி உள்ளனர். முதலில் ஒப்புக்கொண்ட அவர், பின்னர் மறுத்து விட்டார். இதனால் உமாமகேசுவரியை கொலை செய்ய சீனியம்மாளும், அவருடைய கணவர் தன்னாசியும் மகனுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து சீனியம்மாளையும், தன்னாசியையும் நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மதுரையில் வைத்து கைது செய்தனர். அங்கிருந்து 2 பேரையும் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு நள்ளிரவு 12 மணி வரை அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் 2 பேரையும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர்.
இதைத்தொடர்ந்து 2 பேரையும் நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாபு வீட்டுக்கு அழைத்து சென்று, அவர் முன்பு ஆஜர்படுத்தினார்கள். பின்னர் மாஜிஸ்திரேட்டு பாபு, அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலையில் சீனியம்மாளை, நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள பெண்கள் சிறையிலும், தன்னாசியை, பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் அடைத்தனர்.
Related Tags :
Next Story