நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை: அப்பர் பவானி, அவலாஞ்சி, குந்தா அணைகளில் உபரி நீர் வெளியேற்றம்


நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை: அப்பர் பவானி, அவலாஞ்சி, குந்தா அணைகளில் உபரி நீர் வெளியேற்றம்
x
தினத்தந்தி 1 Nov 2019 3:45 AM IST (Updated: 1 Nov 2019 12:34 AM IST)
t-max-icont-min-icon

நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் அப்பர் பவானி, அவலாஞ்சி, குந்தா அணைகளில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

மஞ்சூர்,

நீலகிரி மாவட்டம் முழுவதும் 13 நீர் மின் உற்பத்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு தினமும் 833.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அப்பர் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா, போர்த்திமந்து உள்பட அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை கொண்டு மின் உற்பத்தி நடைபெறுகிறது. இந்த ஆண்டு தொடக்க மாதங்களில் நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் அணைகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. மேலும் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் நிலவி யது. ஆனால் ஆகஸ்டு மாதம் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்தது. இதனால் ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்தது.

இதனால் நீர் மட்டம் உயர்ந்து முழு கொள்ளளவை எட்டிய அப்பர் பவானி, குந்தா, பைக்காரா, கிளன்மார்கன், போர்த்திமந்து உள்ளிட்ட அணைகளில் உபரி நீர் திறந்து விடப் பட்டது.

தற்போது வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்று அப்பர் பவானி, அவலாஞ்சி, குந்தா அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் தனது முழு கொள்ளளவான 210 அடியை அப்பர் பவானி அணை எட்டியது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து வினாடிக்கு 520 கன அடி உபரி நீர் திறந்து விடப் பட்டது. மேலும் 171 அடி கொள்ளளவு கொண்ட அவலாஞ்சி அணையும் நிரம்பியது. பின்னர் அந்த அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதேபோன்று 89 அடி கொள்ளளவு கொண்ட குந்தா அணையில் இருந்து வினாடிக்கு 750 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் எமரால்டு, எம்.ஜி.ஆர். நகர், நேரு நகர், நேரு கண்டி, தக்கர் பாபா நகர், தங்காடு தோட்டம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அவர்களை கலெக்டர் கேட்டு கொண்டுள்ளார். கடந்த 1907-ம் ஆண்டு பெய்த கனமழையில் அப்பர் பவானி, அவலாஞ்சி, குந்தா அணைகளில் இருந்து தொடர்ந்து 9 நாட்களுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது. அதன்பிறகு இந்த ஆண்டுதான் தொடர்ந்து 15 நாட்களுக்கு அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story